புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் என பல பட்டத்துடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், படப்பிடிப்பிப்புக்காக தண்ணீர் எடுத்த ஒரு கிணற்றை அந்த கிராம மக்கள் அப்படியோ விட்டுங்கள் என்று கூறி அந்த கிணற்றை பாதுகாத்துள்ளனர் என்பது பலரும் அறிந்திடாத ஒரு தகவல்
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தனது படங்களில் மக்களுக்கு உதவுவது, ஆளும் வர்க்கதை எதிர்த்து குரல் கொடுப்பது, மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பாடுவதுவது என ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவாக வலம் வந்தவர். மேலும், தனது படங்களில் தான் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காதவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல் தன்னை தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை சாப்பிட வைத்து அனுப்பும் பண்பு கொண்ட எம்.ஜி.ஆர், திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது நிஜ வாழ்க்கையிலும், பலருக்கும் அள்ளிக்கொடுத்த வள்ளல் என்று போற்றப்படுகிறார். இதன் காரணமாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதேபோல் திரைப்படங்களில் அவர் இறப்பது போன்ற காட்சிகள் வந்தால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல், தியேட்டரை அடித்து நொருக்கிய சம்பவங்கள் கூட தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ளது.
ரசிகர்களால் அன்புடன் வாத்தியார் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர், தனது திரைப்படம் முழுவதும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் சொல்லக்கூடிய நல்ல கருத்துக்கள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தனது கடைசி படம் வரை அதில் உறுதியாகவும் இருந்தவர். இதனால் தான் அவரை ரசிகர்கள் இன்றுவரை மறக்காமல் வணங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அப்போதைய தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் கை பட்ட பொருட்கள் என்றால் மக்கள் மத்தியில் அந்த பொருளுக்கு பலத்த போட்டி இருக்கும்.
ஒருமுறை அரசியல் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர், சோடா குடித்தபோது, பாதி சோடாவை அப்படியே வைத்துள்ளார். கூட்டம் முடிந்து அவர் இறங்கியபின், அந்த மீதி சோடாவை குடிக்க ரசிகர்கள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அதன்பிறகு அவர்களே முடிவு செய்து அந்த பாதி சோடாவை ஒரு அண்டாவில் ஊற்றி,அந்த அண்டா நிறைய தண்ணீர் ஊற்றி அதனை அனைவரும் குடித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதேபோன்று படப்பிடிப்புக்காக செய்யப்பட்ட ஒரு கிணற்றில், எம்.ஜி.ஆர் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக அந்த கிணறு அப்படியே இருக்கட்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1976-ம் ஆண்டு எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் ஊருக்கு உழைப்பவன். எம்.ஜி.ஆா நாயகனாக நடித்த இந்த படத்தில், ஒரு காட்சியில் கிணற்றில் இருந்து எம்.ஜி.ஆர் தண்ணீர் எடுத்து குடத்தில் ஊற்றுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை படமாக்கும்போது மக்கள் எம்.ஜி.ஆர் தண்ணீர் எடுப்பதை ரசித்து பார்த்தக்கொண்டு இருந்துள்ளனர். இந்த காட்சி முடிந்தவுடன், குடத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு குடத்தை எடுக்க படக்குழுவில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.
இதை பார்த்த மக்கள் வேண்டாம் அந்த தண்ணீர் எம்.ஜி.ஆர் கைப்பட்ட தண்ணீர். அதை கீழே கொட்டிவிடாதீர்கள். அந்த தண்ணீர் எங்களுக்கு அமிர்தம் மாதிரி என்று சொல்லிவிட்டு, ஊரில் இருந்த மக்கள் அனைவரும் அந்த தண்ணீரை குடித்துள்ளனர். இந்த தகவலை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஓ.எச்.சினிமா யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“