தன்னை சீக்கிரம் வர சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கிய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தனது பாடல் மூலம் கண்ணதாசன் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
தமிழ் க்ளாசிக் சினிமாவின் முக்கிய கவிஞர்களின் கண்ணதாசனுக்கு தனி இடம் உண்டு. வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்த கவிஞர் கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன்.
அதேபோல் க்ளாசிக் சினிமாவில் தனது மெல்லிசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். முன்னணி நடிகர்கள் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை தனது இசையால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எம்.ஸ்.வி, கண்ணதாசனுடன் இணைந்த அனைத்து படங்களும் பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளது. அதேபோல் இவர்களுக்கு இடையில் நல்ல புரிதலும் இருந்துள்ளது.
இசையமைப்பு மற்றும் பாடல்கள் எழுதும்போது எம்.ஸ்.வி. – கண்ணதாசன் இடையே பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் எம்.ஜி.ஆர் நடித்த படத்திலும் நடந்துள்ளது. 1963-ம் ஆண்டு ஆர்.ஆர் பிச்சர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் பெரிய இடத்து பெண். எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, சரோஜா தேவி, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் கமிட் ஆகியுள்ளார். அப்போது அவரை சந்தித்த எம்.எஸ்.வி அண்ணே நீங்கள் வழக்கம்போல் தாமதமாக வராமல், இந்த படத்திற்கு கொஞ்சம் சீக்கிரமாக வந்து பாடல் எழுதி கொடுக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை விதித்துள்ளார். அந்த கட்டளையை ஏற்றுக்கொண்ட கண்ணதாசனும், சீக்கிரமாகவே கம்போசிங் ரூமுக்கு வந்துவிடுகிறார். ஆனால் அங்கு எம்.எஸ்.வி இல்லை.
என்ன இவன் நம்மை சீக்கிரம் வர சொல்லிவிட்டு எங்கே போய்விட்டான் என்று நினைத்த கண்ணதாசன், எம்.எஸ்.வி வீட்டுக்கு போன் செய்துள்ளார். போனை எடுத்த அவரது உதவியாளர் நைட் 3 படத்திற்கு ரீ ரெக்கடார்டிங். இரவு 2 மணிக்கு தான் சார் வந்து படுத்தார். இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறார். எழுப்பினால் திட்டுவார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் நீ அவரை எழுப்பு நான் கொஞ்ச நேரம் கழித்து போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துள்ளார்.
அதேபோல் சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும் எம்.எஸ்.வி எழுந்திருக்கவில்லை. அடுத்த சில நிமிடங்கள் காத்திருந்தபோது படத்தின் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா வந்திருக்கிறார். கண்ணதாசன் நடந்ததை அவரிடம் சொல்ல, எம்.எஸ்.வி.வேண்டுமென்றே அவ்வாறு செய்திருக்கமாட்டார் நீங்கள் கோபப்படாதீர்கள். நான் சுட்சிவேஷனை சொல்கிறேன் நீங்கள் பாடல் எழுதுங்கள் எம்.எஸ்.வி வந்தவுடன் இசையமைக்கலாம் என்று கூறியுள்ளார்.
படத்தில் எதிரியின் மகளை திருமணம் செய்துகொண்ட நாயகன், எதிரி செய்த தப்பினால் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியுடன் வாழவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிக்கிறார். அப்போது அவர் இறைவனை நோக்கி பாடுவது போன்ற ஒரு பாடல் என்று சொல்ல, கண்ணதாசன் 2 வரிகள் எழுதி இதற்கு இசையமைக்க சொல்லுங்கள் மீதி வரிகளை நான் வந்து எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் எழுத்த எம்.எஸ்.வியிடம் கண்ணதாசன் போன் செய்த விஷயத்தை சொல்ல பதறியடித்துக்கொண்டு வருகிறார். அப்போது கண்ணதாசன் கொடுத்த வரிகளை இயக்குனர் எம்.எஸ்.வியிடம் கொடுக்கிறார். இதை படித்த எம்.ஸ்.விக்கு சரியான அதிர்ச்சி. படத்தின் சுட்சிவேஷனை புரிந்துகொண்ட கண்ணதாசன், தன்னை சீக்கிரமாக வர சொல்லிவிட்டு தூங்கிய எம்.எஸ்.வி இணைந்து ‘’அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா’’ என்ற பாடலை எழுதியிருந்தார்.
தான் சந்திக்கும் சம்பவங்களை வைத்தே பாடல்களை கொடுக்கும் கண்ணதாசன், எம்.எஸ்.வி தூங்கியதை பாடலில் உணர்த்தினார். இந்த பாடல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நிலையில், படமும் மெகாஹிட் படமாக அமைந்தது. இந்த படம் பின்னர் சகலகலா வல்லவன் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“