தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜியை போலவே நாடகத்தில் இருந்து சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் நம்பியார். க்ளாசிக் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் நடிகர் என்றால் அது நம்பியார் தான். தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்னாளில் முன்னணி நடிகராக உயர்ந்த நம்பியார், எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.
சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஐய்யப்ப சாமி பக்தராக அறியப்பட்ட நம்பியார் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். அதேபோல் படங்களில் எம்.ஜி.ஆரை அடிப்பது போன்ற காட்சிக்காக நிஜத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் திட்டுக்கள் வாங்கிய நம்பியார் பலமுறை நேரடியாகவே மிரட்டல்களை சந்தித்துள்ளார். இவரின் காரை வழிமறித்து வாத்தியாரை அடிப்பியா என்று மிரட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.
அதே சமயம் எம்.ஜி.ஆருடன் நட்பு பாராட்டி வந்த நம்பியார் பலமுறை அவருடன் இணைந்து பல விழாக்களில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் நம்பியார் கூட்டணியில் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தின் வெற்றி விழாவில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. எம.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவரை அடித்து துன்புறுத்தும் வேடத்தில் நம்பியார் நடித்திருந்தார்.
படத்தின் வெற்றி விழாவில், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சு மக்களுக்கு நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக 2 மைக்கள் வைக்கப்பட்டிருந்துள்ளது. இதை கவனித்த நம்பியார் ‘நாங்களெல்லாம் பேசும் போது ஒரு மைக். எம்.ஜி.ஆர் பேசும்போது மட்டும் இரண்டு மைக்கா?.. அக்கிரமம்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
நம்பியாரின் கமெண்ட் கேட்டு மக்கள் கூட்டமே சிரித்த நிலையில், கூட்டத்தில் பேச தொடங்கிய எம்.ஜி.ஆர், ‘இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு இரண்டு மைக்’ என என்று சொல்லி நம்பியாரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுக்க மக்கள் கைத்தட்டல் பலரின் காதுகளை பிளந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“