தமிழ் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்கள் உயர்வாக நடத்தப்படுவது சினிமா தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து வழக்கமான நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஹீரோக்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்த நடிகைகள் படத்தில் இருந்தே நீக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளது. அதேபோல் ஒரு நிகழ்வு எம்.ஜி.ஆர் படத்திலும் நிகழ்ந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி முண்ணணி நடிகர்களாக இருந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் சவுகார் ஜானகி. குறிப்பாக, சிவாஜியுடன், உயர்ந்த மனிதன், புதிய பறவை, பாவை விளக்கு, பாலும் பழமும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆருடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோருடன் நடிக்கும் முன்பே எம்.ஆர்.ராதாவுடன் சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி 1950-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாக சவுகாரு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அன்று முதல் சவுகார் ஜானகி என்று அழைக்கப்படும் இவர், 1952-ம் ஆண்டு வளையாபதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில், 10 வருட இடைவெளிக்கு பிறகு எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1962-ம் ஆண்டு வள்ளிநாயகம் என்பது தயாரிப்பில், எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கத்தில் வெளியான மாடப்புறா என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சவுக்கார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது
முதல் நாள் படப்பிடிப்பில், சவுகார் ஜானகி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்க. அப்போது ஸ்டூடியோவுக்குள் என்ட்ரி ஆன, எம்.ஜி.ஆருக்கு எழுந்து நின்று வணக்கம் சொன்ன, சவுகார் ஜானகி, மீண்டும் அமர்ந்து கால்மேல் கால் போட்டுள்ளார். இதனை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவை அழைத்து, எனக்கு பிடிக்கவே இல்லை என்ன இந்த பொண்ணு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட எம்.ஆர்.ராதா, அவர் எங்ககோ இங்கிலாந்தில் பிறக்க வேண்டிய இங்கிலீஷ்காரிப்பா, அப்படி உட்காந்திருக்கார் என்றால் அது தப்பில்லை அப்படித்தான் அது. நல்ல பொண்ணு என்று கூறியுள்ளார். எம்.ஆர்.ராதா இவ்வளவு சொன்னாலும், கடைசியில், சவுகார் ஜானகி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு 3 வருடங்கள் கழித்து, எம்.ஜி.ஆர் நடிப்பில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான பணம் படைத்தவன் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆருடன் இணைந்து சவுகார் ஜானகி நடித்திருந்தார்.
இந்த படத்தில் டி.ஆர்.ராமண்ணா, எம்.ஜி.ஆருடன் பேசி, சவுகார் ஜானகியை அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தான் மாடப்புறா படத்தில் தவறு செய்துவிட்டதாக எம்.ஜி.ஆர் உணர்ந்திருப்பார் என்று சவுகார் ஜானகி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“