எழுத்தாளர் ஆரூர் தாஸ் இயக்குனராக அறிமுகமான படத்தில் நடிகை சரோஜா தேவியை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதிய பெருமை இயக்குனர் ஆரூர்தாஸுக்கு உண்டு. 1954-ம் ஆண்டு வெளியான நாட்டியதாரா என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமான ஆரூர்தாஸ், பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருந்தாலும், ஒரு படம் மட்டுமே இயக்கியிருந்தார்.
ஆரூர்தாஸ் இயக்கத்தில் வெளியான படம் தான் ''பெண் என்றால் பெண்''. 1967-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்திருந்தார். சரோஜா தேவி, பண்டரிபாய், விஜயகுமாரி, அசோகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த படத்தை ஆரூர்தாஸ் இயக்குகிறார் என்றதும், நீங்கள் படம் இயக்க கூடாது என்று எம்.ஜி.ஆர் அவரை எச்சரித்துள்ளார். ஆனாலும் அவரது எச்சரிக்கையை மீறி ஆரூர்தாஸ் இயக்குனராக இந்த படத்தை தொடங்கிய நிலையில், அப்போது திருமணமாகி கணவருடன் இருந்த நடிகை சரோஜா தேவி மீண்டும் நடிக்க வந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சரோஜா தேவி ரீ-என்டரி தொடர்பான தகவல் செய்தியாக வெளியானது.
இந்த செய்தியை பார்த்த எம்.ஜி.ஆர் அன்று இரவே, ஆரூர்தாஸ்க்கு போன் செய்து, நீங்கள் படம் இயக்க கூடாது என்று நான் தடுத்தும் நீங்கள் அதை கேட்கவில்லை. ஆனாலும் எச்சரிக்கையாக படம் இயக்குங்கள் என்று கூறிய, எம்.ஜி.ஆர், சரோஜா தேவி இந்த படத்தில் நடிக்கிறாராமே என்று கேட்க, ஆமாம் என ஆரூர்தாஸ் பதில் அளித்துள்ளார். அவருக்கு இப்போ தான் திருமணம் ஆகியுள்ளது. உங்கள் படத்தில் நடிக்கும்போது அவர் கர்ப்பமாகிவிட்டால் எங்கள் ஷூட்டிங் பாதிக்காதா என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட ஆரூர்தாஸ், சரோஜா தேவி தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் நடிப்பதாக கூறியுள்ளார். எனது முதல் படம் என்பதால் நான் எதிலும் தலையிடவில்லை என்று சொல்ல, எப்படி இருந்தாலும், இந்த படத்தில் ஒரு குறை இருந்தாலும், அது உங்களைத்தான் சுட்டிக்காட்டும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். சரோஜா தேவி இணைந்து நடித்த கடைசி படமாக அரசக்கட்டளை படம் இருந்தாலும், அதற்கு முன்பே வந்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் படப்பிடிப்பில் இருவமே பேசிக்கொள்ளமாட்டார்கள்.
அந்த படத்தில் படப்பிடிப்பில் இருந்த ஆரூர் தாஸ் இதை நினைத்துக்கொண்டு, அண்ணே இந்த படம் வெற்றி பெற்றால் உங்களுக்கு ரோஜா மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்குவேன். தோல்வியடைந்தால் உங்கள் முகத்திலே முழிக்கமாட்டேன் என்று ஆரூர்தாஸ் கூறியுள்ளார். அதன்படி 1967-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான பெண் என்றால் பெண் திரைப்படம் தோல்விப்படமாக அமைந்த நிலையில், அடுத்து பல வருடங்கள் எம்.ஜி.ஆர் ஆரூர்தாஸ் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“