தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி. இருவரும் இணைந்து கூண்டுக்கிளி என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள நிலையில், அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து எம்.ஜி.ஆர் ஒரு பழைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னாளில் நாயகனாக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். 1936-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 11 வருடங்களுக்கு பிறகு 1947-ம் ஆண்டு தான் நாயகனாக நடித்திருந்தார். மறுபக்கம் நாடக நடிகராக இருந்த சிவாஜி கணேசன் 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து பிரபலமானார்.
அதன்பிறகு இருவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.ராமண்ணா எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரையும் இணைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது சகோதரி டி.ஆர்.ராஜகுமாரி. எம்.ஜி.ஆர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அடுத்த நாளே சிவாஜியும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இருவரும் போட்டி போட்டு நடித்திருந்த இந்த படம், தனக்கு பெரிய லாபத்தை கொடுக்கும் என்று நினைத்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ராமண்ணாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் நாளில் தியேட்டருக்கு வந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டதால் இந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கூண்டுக்கிளி திரைப்படம் திரையிடப்படாத நிலையில், எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருமை் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தனர்.
இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாக தொடங்கியது. அப்போது ஒரு செய்தியாளர் எம்.ஜி.ஆரிடம் சென்று உங்களுக்கு சிவாஜிக்கும் இடையே மோதல் இருப்பதாக சொல்கிறார்கள். அது இல்லை என்று நிரூபிக்கவாது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாமே என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர் எங்கள் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
இப்போ இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் படப்பிடிப்பு முடிந்து ஒழுங்காக வெளியாகும் என்று நினைக்கிறீர்களா? படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு இடத்தில் கேமரா வைத்தால், அந்த காட்சியில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கும் தெரியும் சிவாஜிக்கும் தெரியும். அதனால் படப்பிடிப்பு நடுவிலே பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக படம் வெளியானாலும், தியேட்டரில் எனது ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் இடையே கலவரம் தான் வெடிக்கும் அதனால் இப்போ நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது சாத்தியமாக என்று நீங்களே சொல்லுங்கள் என்று அந்த செய்தியாளரிடம் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“