சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு மட்டுமே பாடல் எழுதி வந்த கவிஞர் புலமைப்பித்தன், அவர் எழுதிய ஒரு பாடல் அவருக்கே தெரியாமல் சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய கவிஞர்களில் ஒருவராக இருந்தவர் புலமைப்பித்தன். தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்த இவர், ஒரு சிறிய நாடக மன்றத்தை உருவாக்கி அதில் நடித்தும் வந்துள்ளார். காலப்போக்கில் கவிஞராக மாறிய அவர், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதி அவரின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதனால் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதுவது புலமைப்பித்தனுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் தனது அஸ்தான நாயகனான சிவாஜி கணேசனுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்ற வருத்தம் புலமைப்பித்தனுக்கு உண்டு. அப்படி சிவாஜி படத்திற்கு பாடல் எழுதினால், அவரின் போட்டி நடிகராக எம்.ஜி.ஆர் தவறாக நினைத்துவிடுவாரோ என்ற பயமும் அவருக்கு இருந்ததால், சிவாஜி படத்திற்கு பாடல் எழுதும் முயற்சியை அவர் மேற்கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனிடையே எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன், சிவாஜி நடித்த சிவகாமியின் செல்வன் ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது. இரு படங்களுக்குமே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இதில் எம.ஜி.ஆர் படத்தில் ஒரு இலக்கியத்தனமாக காதல் பாடல் வேண்டும் என்று சொல்லி புலமைப்பித்தனிடம் கேட்டுள்ளனர். அப்படி புலமைப்பித்தன் எழுதிய ஒரு பாடல் டியூன் செய்யப்பட்டு பதிவாகியுள்ளது. அனைவருக்கும் பாடல் பிடித்துள்ளது.
இந்த பாடலை எம்.ஜி.ஆரிடம் போட்டு காட்டியுள்ளனர். இந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் பாடல் நன்றாக இருக்கு ஆனால் இந்த சுட்சிவேஷனுக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்லி வேறு பாடலை எழுதுமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அவர் எழுதிய வேறு பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் அந்த பாடலை ஓகே செய்துள்ளார். அதே சமயம் முதலில் எம்.ஜி.ஆர் வேண்டாம் என்று சொன்ன பாடல் முழுமையாக எம்.எஸ்.விஸ்வநாதன் கையில் இருந்துள்ளது. இந்த சமயத்தில் சிவகாமியின் செல்வன் படத்தில் எம்.எஸ்.வி இசையமைக்க சென்றுள்ளார்.
அப்போது சிவகாமியின் செல்வன் படக்குழு சொன்ன ஒரு சுட்சிவேஷனை கேட்ட எம்.எஸ்.வி இதற்கு புலமைப்பித்தன் எழுதி எம்.ஜி.ஆர் வேண்டாம் என்று சொன்ன பாடல் பொறுத்தமாக இருக்கும் என்று யோசித்து அந்த பாடல் பற்றி கூறியுள்ளார். அந்த பாடலை கேட்ட படக்குழுவுக்கு பிடித்துபோக, புலமைப்பித்தனுககு சொல்லாமல் அந்த பாடலை சிவகாமியின் செல்வன் படக்குழுவுக்கு கொடுத்துள்ளார் எம்.எஸ்.வி. இதன் பிறகு சில நாட்கள் கழித்து புலமைப்பித்தன் வேறொரு படத்திற்காக எம்.எஸ்.வியை சந்தித்துள்ளார்.
அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது சிவாஜி படத்திற்கு உங்கள் பாடலை கொடுத்துவிட்டேன் என்று எம்.எஸ்.வி சொல்ல, புலமைப்பித்தன் அதிர்ச்சியாகியுள்ளார். இதன் பிறகு தான் எழுதிய பாடல் சிவாஜி படத்தில் இடம் பெற்றது குறித்து புலமைப்பித்தன் எம்.ஜி.ஆரிடம் சொல்ல, இதை கேட்டு எம்.ஜி.ஆர் கோபப்படுவதை பார்த்த புலமைப்பித்தன், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் இனி சிவாஜி படங்களுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட எம்.ஜி.ஆர், கவிஞர் என்றால் அனைத்து படங்களுக்கும் தான் பாடல் எழுத வேண்டும் நீங்கள் எழுதுங்கள் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டு என்ன பாடல் என்று விசாரிக்க, புலமைப்பித்தன் நடந்ததை கூறியுள்ளார். மேலும் அந்த பாடலின் அர்த்தத்தையும் சொல்ல எம்.ஜி.ஆர் அந்த பாடலை தவறவிட்டதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.