தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது.
அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு 5-வது படமாக அமைந்தது கந்தன் கருணை. இந்த படத்தில் முருகன் வேடத்தில் நடித்திருந்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், அடுத்து சோலோ ஹீரோவாக பல படங்களில் கமிட்டி ஆன சிவக்குமார், வெற்றிகளை குவித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.
அதே சமயம் சிவாஜி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் படங்களிலும் சிவக்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த வகையில், 1967-ம் ஆண்டு வெளியான காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார். பா.நீலகண்டன் இயக்கிய இந்த படத்தில், ஜெயலலிதா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், நாகேஷ், அசோகன், நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, இந்த படத்தின் அனைத்து பாடல்களையும், வாலி மற்றும் ஆலங்குடி சோமு ஆகியோர் எழுதியிருந்தனர். இந்த படத்தில் நடிக்கும்போது சிவக்குமாருக்கு, எம்.ஜி.ஆருடன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பில் தன்னை பற்றி பல விஷயங்களை எம்.ஜி.ஆரிடம் பேசிய சிவக்குமார், தனது தாய்க்கு கையில் அடிப்பட்டு கட்டு போட்டு 6 மாதங்கள் ஆன பின்பும் நான் கஷ்டப்படுவேன் என்பதால் எனக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
அந்த அளவிற்கு என்னை கலங்காமல் என் அம்மா பார்த்துக்கொண்டார் என்று சிவக்குமார் சொல்ல, எம்.ஜி.ஆர் அவருக்கு ஆளுதல் கூறியுள்ளார். அடுத்த சில நாட்களில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தை அறிந்த சிவக்குமார், உடனடியாக அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றபோதும், அவரை பார்க்க விடவில்லை. இதனால் வந்தவர்கள் அனைவரும் ஒரு நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றபோது, சிவக்குமாரும் இருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்க முடியாமல் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து 3-வது முறை போகும்போது, காவல்காரன் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் இவரை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரை பார்க்க அனுமதித்துள்ளார். அப்போது சில மணி நேரமே பேசியிருந்தாலும், இவரை பார்த்தவுடன் நீ சிவக்குமார் தானே என்று விசாரித்த எம்.ஜி.ஆர், கையில் அடிப்பட்ட உங்க அம்மா எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட சிவக்குமார், அங்கேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
நான் இதற்கு முன்பு அவரை ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு கேட்டுள்ளார் என கூறிய சிவக்குமார் எம்.ஜி.ஆரை நினைத்து பெருமைகொண்டுள்ளார் என பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“