தமிழ் சினிமாவில் சிவாஜி நடிக்க வேண்டிய படம் ஒன்று, எம்.ஜி.ஆர் நடித்து அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது என்ன படம், சிவாஜி நடிக்காமல் விட்டது ஏன் என்பது குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீதர். வென்னிற ஆடை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல ஃபீல் குட் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆ நடிப்பில் இயக்கிய படம் உரிமைக்குரல். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.ஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க, வாலி கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில், நாகேஷ்வரராவ் நடிப்பில் வெளியான ‘தேசரா புல்லோடு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்திற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் – ஸ்ரீதர் கூட்டணியில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுள்ளது. ஆனால் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் படத்தை இயக்காத ஸ்ரீதர், சிவாஜி படத்தை இயக்கியபோது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார். அப்போது அவரது நண்பர் கொடுத்த ஐடியாவில் தான் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேட்க, அவரும் பழையதை மறந்து கால்ஷீட் கொடுத்துள்ளார். அதன்பிறகு உருவான படம் தான் உரிமைக்குரல். ஒரு பண்ணையாருக்கும் விவசாயிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த படம். பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் மூலம் ஸ்ரீதர் தனது கடன்களை அடைத்துள்ளார்.
அதே சமயம் இந்த படத்தின் கதையை ஸ்ரீதர் முதலில் சிவாஜியிடம் தான் கூறியுள்ளார். கதையை கேட்ட சிவாஜி, இந்த கதை எனக்கு செட் ஆகாது. அண்ணனுக்கு தான் செட் ஆகும் நீங்கள் அவரை வைத்து எடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகே, இயக்குனர் ஸ்ரீதர் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேட்க முடிவு செய்துள்ளார் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “