தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்று இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் சினிமாவில் கடுமையாக விமர்சனங்களை சந்தித்தபோதும் தனது அயராத முயற்சியின் காரணமாக அதில் வெற்றி பெற்றுள்ளார்.
சிறுவயது முதல் நாடக நடிகராக இருந்து பின்னாளில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகளுக்கு மேலாக துணை நடிகராக இருந்து, அதன்பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த படத்தில் இருந்து தான் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படுவோம் என்று ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டே சில படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
ஒரு கட்டத்தில் நிலையான நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட எம்.ஜி.ஆருக்கு சரித்திர படங்கள் பெரிய வெற்றியை கொடுத்து. அடுத்து சில வருடங்களில், சிவாஜி பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை குவித்தார். இந்த படம் அவருக்கு பெரிய பாராட்டுக்களை பெற்று தந்த நிலையில், சமூகபடங்களுக்கான வரவேற்பும் பராசக்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் அதிகரிததது.
அதே காலக்கட்டத்தில் வந்த ஜெமினி கணேசனும், சமூக படங்களில் கவனம் செலுத்தியதால், எம்.ஜி.ஆரும் இது போன்ற படங்களில் நடித்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று நினைத்து, 1959-ம் ஆண்டு தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்தில் நடித்துள்ளார். அண்ணா கதை எழுதிய இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் எம்.ஜி.ஆர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சரித்திர படங்கள் தான் அவருக்கு வெற்றியை கொடுக்கும். சமூக படங்களில் நடித்து எம்.ஜி.ஆர் வெற்றியை பார்க்கமாட்டார் என்று பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளது. அப்போது தான் 1961-ம் ஆண்டு பா.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான திருடாதே படம் எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து சரித்திர படம் மட்டுமல்ல, சமூகபடங்களையும் தன்னால் வெற்றிப்படமாக கொடுக்க முடியும் என்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் கதை எழுதிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார், கே.ஏ.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“