தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர், திரைத்துறையில் ஹீரோவாக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சிறு வயதில் நாடக நடிகராக அறிமுகமாகி, 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு பல படங்களில் துணை கேரக்டரில் நடித்த எம்.ஜி.ஆருக்கு நாயகன் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், சினிமாவில் நடிக்க, சண்டை, வாள்வீச்சு என பல பயிற்சிகளை பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு பாடல் பாட தெரியாது.
இதன் காரணமாகவே அவருக்கு சினிமாவில் ஹீரோவாக வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அந்த காலக்கட்டததில் தான் சினிமாவில் பின்னணி பாட்டு முறை அறிமுகமாகியுள்ளது. ஹீரோ நடிப்பதும், அவருக்கு, ஒரு பாடகர் பின்னணி குரல் கொடுப்பதும் அறிமுகமானார். அதன்பிறகு 10 வருட போராட்டத்திற்கு பின் ராஜகுமாரி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்திருந்தார். தனக்கு பாட தெரியாது என்பதால் இந்த படத்தில் இருந்து தான் எப்போ வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற பயத்துடனே எம்.ஜி.ஆர் நடித்துள்ளார்.
படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரானபோது இந்த படத்தை யாரும் வாங்காத நிலையில், ஒரு சிலர் மட்டுமே படத்தை வெளியிட்டுள்ளனர். வெளியிட்ட அனைவருக்குமே ராஜகுமாரி திரைப்படம் பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எம்.எம்.மாரியப்பன் என்ற பாடகர். அதனைத் தொடர்ந்து அடுத்து எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு அவர் தான் பின்னணி பாடகராக இருந்துள்ளார்.
தொடர்ந்து 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தில், டி.எம்.சௌந்திரராஜன் பாடல் பாடியுள்ளார். அப்போது அவரை பார்த்த எம்.ஜி.ஆர் அவரின் விபரங்களை வாங்கி வைத்துக்கொண்டார். அதன்பிறகு பக்ஷிராஜா ஸ்டூடியோ சார்பில் தான் நடிக்க ஒப்பந்தமான மலைக்கள்ளன் திரைப்படத்தில் டி.எம்.எஸ்.தான் தனக்கு பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அந்த படத்திற்காக டி.எம்.எஸ். அழைக்கப்பட்டுள்ளார். மலைக்கள்ளன் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு டி.எம்.எஸ். பாட தொடங்கியுள்ளார்.
முன்னதாக எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த மந்திரி குமாரி என்ற படத்தில் டி.எம்.எஸ். ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் பக்தி பாடல் என்பதால், நான் பகுத்தறிவின் பக்கம் இருக்கிறேன். அதனால் இந்த பக்தி பாடல் தேவையில்லை என்று நிராகரித்துள்ளார். முதல் பாடலை நிகராகரித்த எம்.ஜி.ஆர் பின்பு டி.எம்.எஸ்.தான் தனக்கு பாட வேண்டும் என்று வலுக்கட்டாயமாக கேட்டு வாங்கியுள்ளார். எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும்வரை டி.எம்.எஸ். அவருக்கான கொள்கை பாடல்களை பாடி வந்தது குறிப்பிடத்தக்கது. திரை ஆய்வாளர் வாமனன் ஓஎச் சினிமா யூடியூப் சேனலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“