சிறுவயது முதல் நாடக நடிகராக இருந்து பின்னாளில் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 10 வருட போராட்டத்திற்கு பின் நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகும் அவருக்கு பல தடைகள் வந்தாலும், அதனை கடந்து முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனக்கென நிலையான இடத்தை பிடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். அதேபோல் தான் நடிக்கும் அல்லது இயக்கும் படங்கள் தொடர்பான முடிவுகளை தானே எடுப்பதில் உறுதியாக இருந்துள்ள எம்.ஜி.ஆர், தான் இயக்கி தயாரித்த ஒரு படத்தை வெளியிட தனது உதவியாளரின் அறிவுரையை கேட்டு செயல்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் நடிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம், உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆரே தயாரித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மொத்தம் 13 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனாலும் டார்ஜிலிங்கில் ஒரு பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பியுள்ளார்.
இந்த பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர் பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் பெற்றிருந்த நிலையில், ஏற்கனவே இந்த படத்திற்காக மொத்த பணத்தையும் செலவழித்துவிட்டோம். அதே சமயம் இந்த படத்தில் ஏற்கனவே பல பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. அதனால் இன்னொரு பாடலை சேர்த்தால் அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்று எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
மேலும் அடுத்து திண்டுக்கல் இடைத்தேர்தல் வர உள்ளது. தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணம் இல்லை. இந்த படம் வெளியானால் தான் பணம் வரும். அதை வைத்து தான் தேர்தல் செலவுகளை கவனிக்க முடியும் என்று ஆர்.எம்.வீரப்பன் சொல்ல, தேர்தலுக்கு முன்பே படம் வெளியாகி தோல்வியை சந்தித்துவிட்டால், அதுவே தேர்தலில் வெற்றியை பாதிக்கும் என்று எம்.ஜி.ஆர் நினைத்துள்ளார்.
ஆனாலும், ஆர்.எம்.வீரப்பன் சொல்வது சரிதான் என்று முடிவு செய்து 1970-ம் ஆண்டு தயாரான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 1973-ம் ஆண்டு வெளியாகி எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற்ற படமாக மாறியது. ஆர்.எம்.வீரப்பன் சொல்லை கேட்டு படத்தை வெளியிட்ட எம்.ஜி.ஆர் படமும் வெற்றியை கொடுத்த நிலையில், தேர்தலிலும் வெற்றியை பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“