தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்து அரசியலில் தடம் படித்த எம்.ஜி.ஆருடன் கவிஞர் வாலி நெருக்கமாக இருந்திருந்தாலும், எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியில் சேருமாறு எவ்வளவே வற்புறுத்தியும் வாலி அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு காரணமாக பின்னணியில் இருந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
அதே சமயம் வாலி வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர், எழுத வேண்டிய ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், தனது நண்பருடன் டிவிஎஸ் கம்பெனியில் வேலைக்கு சேர மதுரை கிளம்பியுள்ளார். அப்போது கண்ணதாசன் எழுதிய ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கற்பகம் படத்தில் பாடல்கள் எழுதி வாலி பிரபலமான நிலையில், எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே பிரிவு வந்தது. அந்த இடைவெளியில் நிரப்புவதற்காக கண்ணதாசன் இடத்திற்கு வந்த வாலி, தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கினார். இதில் பல பாடல்கள் இன்றும் பேசப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது. எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகும்வரை அவரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள வாலி, அவர் முதல் ஆன பின்னும் அவருடன் நெருக்கமாக இருந்தார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், அவர் எம்.ஜி.ஆர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரின் அரசியல் கட்சியில் சேர கவிஞர் வாலி மறுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கவியரசர் கண்ணதாசன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். தொழில்முறையில் கண்ணதாசன் வாலி இருவரும் போட்டியாளர்கள் என்றாலும் கூட, தனிப்பட்ட வகையில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அந்த வகையில் ஒருநாள், கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒருநாள் அவர்கள் மாலையில் உற்சாகமாக இருந்தபோது, கண்ணதாசன், கவிஞர் வாலிக்கு 3 கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அதில் ஒன்று இருக்கும்போது இன்னொன்றை தேடி போகாதே, சொந்த படம் எடுக்காதே என்று சொன்ன கண்ணதாசன், 3-வதாக எந்த அரசியல் கட்சியிலும் சேராதே என்று கூறியுள்ளார். கண்ணதாசன் சொன்ன இந்த 3 கட்டளைகளையும் கடைபிடித்த கவிஞர் வாலி, அதை மனதில் வைத்து தான் எம்.ஜி.ஆர் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“