எம்.ஜி.ஆர் நடிக்க ஒப்புக்கொண்டு, பின்னாளில் இயக்குனருடன ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார். இந்த படம் தான் கவிஞர் வாலிக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது.
1962-ம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு 3-வது படமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் தான் கற்பகம். ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த நிலையில், கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுத, பி.சுசீலா அணைத்து பாடல்களையும் பாடியிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று, வாலிக்கு பெரிய புகழை சேர்த்தது. இந்த படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முதலில் இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அவரும் கதை பிடித்து போக, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அதே சமயம், இந்த படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் மாமனார் கேரக்டரில் பாலையா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.வி.ரங்காரவ் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர், பாலையா தான் நடிக்க வேண்டும் என்று சொல்ல, அந்த நேரத்தில், கற்பகம் படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டதால், படத்தை தயாரிக்க முடியாத நிலை எழுந்துள்ளது.
நிதி நிலை காரணமாக நிறுவனம் கற்பகம் படத்தை கைவிட்ட நிலையில், ஒரு சில மாதங்கள் கழித்து இந்த படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். அதே சமயம் எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஜெமினி கணேசன் – சாவித்ரி ஆகியோர் நடிபப்பில் படத்தை இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பெரிய வெற்றிப்படமாக மாற்றி வாலிக்கு பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளார். அதன்பிறகு தான் வாலி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதி முன்னணி கவிஞராக உயர்ந்தார்.
கற்பகம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் அந்த படத்தில் தொடர்ந்து நடித்திருந்தால், அப்போது வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்திருக்குமா? என்ற கேள்வி இருந்தாலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே இயக்குனர் தயாரிப்பாளராக இருந்ததால், வாலிக்கு வாய்ப்பு கிடைத்து 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதும் முக்கிய பொறுப்பினை பெற்றிருந்தார்.