சிறிய படங்களுக்கு பாடல்கள் எழுதி, முன்னணிக்கு வந்த கவிஞர் வாலி தான் வாத்தியாருக்கு ஏற்ற கவிஞர் என்று எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வாலியை தியேட்டர் வாசலில் வைத்து தூக்கியதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்து பின்னாளில் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் தான் வாலி. ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த வாலிக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது கற்பகம் தான். அந்த படத்திற்கு பின் கவனிக்கப்படும் கவிஞர்களில் ஒருவராக மாறிய வாலி, எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார்.
1964-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ராமுடு பீடுமு என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய, தயாரிப்பாளர் நாகி ரெட்டியார், எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்க, எங்க வீட்டு பிள்ளை என்ற பெயரில் படத்தை தொடங்கியுள்ளார். இயக்குனர் சாணக்யா இயக்கிய இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இவரும் இசையமைக்க, கவிஞர் வாலி உள்ளிட்ட பலர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக நான் ஆணையிட்டால் என்ற பாடல் இன்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் ஒரு பேவரெட் பாடலாக அமைந்துள்ளது. சென்சாரில் இந்த பாடலில் 75 சதவீத வரிகள் மாற்றம் செய்யப்பட்டதால், முதலில் இருந்ததை போல் பெரியதாக எடுபடாது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க, வாலி மாற்றிய அத்தனை வரிகளும் பெரிய ஹிட் அடித்து, பலரின் பேவரெட் பாடலாக இது மாறியது.
இன்றும் எம்.ஜி.ஆர் குறித்து எந்த நிகழ்ச்சி என்றாலும் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது. அந்த அளவிற்கு பிரபலமான இந்த பாடல் திரைப்படம் வெளியானபோது எம.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியானபோது வாலி தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது இடைவேளையில் இந்த பாடல் வந்துள்ளது. அதன்பிறகு இடைவேளை நேரத்தில் வாலியை பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நம்ம வாத்தியாருக்கு ஏற்ற கவிஞர் இவர் தான்டா என்று சொல்லி, அலேக்காக தூக்கியுள்ளனர். இதை வாலியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“