தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடிப்பில் சில படங்களை தயாரித்த அசோகன் 1974-ம் ஆண்டு தயாரித்த திரைப்படம் நேற்று இன்று நாளை. எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்து பிரிந்து, அதிமுக கட்சியை உருவாக்கி அரசியலில், தனி ஆளாக கால் ஊண்றிய இந்த காலக்கட்டத்தில், திரைப்படங்களிலும் அதீத கவனம் செலுத்தி வந்தார்.
Advertisment
ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர், மஞ்சுளா, லதா, நம்பியார். அசோகன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். புலமைப்பித்தன் வாலி கண்ணதாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் தனியாக பாடும் ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இதை பார்த்த எம்.ஜி.ஆருக்கு அந்த பாடலில் திருப்தி இல்லை. படத்தின் தலைப்பு பாடலில் வர வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் என்ன செய்வது என்று யோசித்துள்ளார். அப்போது கவிஞர் வாலியுடன் மனகசப்பில் இருந்த எம்.ஜி.ஆர் இந்த பாடலுக்காக மீண்டும் அவரை அழைத்துள்ளார். எம்.ஜி.ஆர் அழைப்பை ஏற்று வந்த வாலி, படத்தின் சூழ்நிலையை கேட்டு தெரிந்துகொண்டு 3 நாட்களில் பாடலுடன் வந்துள்ளார்.
அந்த பாடல் தான் ‘’நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’’ என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக உள்ளது. இந்த பாடல் திரையில் வரும்போது பாடலை எழுதியவர் வாலி என்று அவரது குரலிலேயே பேசியிருப்பார். இது தான் வாலிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மிகப்பெரிய மரியாதை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“