துப்பாக்கியால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய போது நடிகையை தூக்கிக்கொண்டு போகும் ஒரு காட்சியில், ஏமாற்றுவர் போன்ற ஒரு காட்சியை படமாக்கலாம் என்று இயக்குனர் கூறியிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் அதெல்லாம் முடியாது நான்தான் தூக்குவேன் என்று அடம் பிடித்து தூக்கியுள்ளார்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், ராதா சலுஜா, வென்னிற ஆடை நிர்மலா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் இன்று போல் என்றும் வாழ்க. கே.சங்கர் இயக்கிய இந்த படத்தில், விஜயகுமார், நம்பியார், தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, வாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன், உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர் வென்னிற ஆடை நிர்மலாவை தூக்கிக்கொண்டு நடப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. எம்.ஜி.ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டதால், படுகாயத்துடன் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், பெரிய ரிஸ்க் எடுத்து தான் எம்.ஜி.ஆர் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதேபோல் படத்தில் வென்னிற ஆடை நிர்மலாவை தூக்கிச்செல்லும் காட்சியை படமாக்கும்போது, எம்.ஜி.ஆர் அதிகமாக வெயிட் தூக்க கூடாது என்று டாக்டர்கள் சொன்னது, வென்னிற ஆடை நிர்மலாவுக்கு நினைவுக்கு வந்துள்ளது. அதேபோல் இதை யோசித்த இயக்குனர் கே.ஷங்கரும், எம்.ஜி.ஆரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த காட்சியை வித்தியாசமாக ஏமாற்றும் வகையில் படமாக்கலாம் என்று கூறி எம்.ஜி.ஆருக்கு ஒரு ஐடியா கூறியுள்ளார்.
ஒரு பெரிய டேபிள் போட்டு அதில் வென்னிற ஆடை நிர்மலாவை படுக்க வைத்து அடியில் எம்.ஜி.ஆர் கை இருப்பது போல் படமாக்கலாம். டேபிள்ளை விட்டு விட்டு இவர்களை மட்டும் படமாக்கினால், எம்.ஜி.ஆர் அவரை தூக்கிச்செல்வது போன்று இருக்கும் என்று சொல்ல, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிய எம்.ஜி.ஆர் அவரை நான் தான் தூக்குவேன் என்று அந்த காட்சியில் அவரே நடித்து முடித்துள்ளார். இது குறித்து வென்னிற ஆடை நிர்மலாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“