நடிப்பு என்றாலும் அரசியல் என்றாலும் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தவறு செய்தால் கண்டிக்கும் எம்.ஜி.ஆர், ஒரு சில முறை அவர்களுக்கு அட்வைசும் செய்திருக்கிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் அட்வைஸ் கொடுத்த நடிகர் ஒருவரை பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் வி.கே.ராமசாமி. நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 1947-ம் ஆண்டு வெளியான நாம் இருவர் என்ற படம் தான் முதல் படம். டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு நிலையான நடிகராக நிலைநிறுத்திக்கொண்டார்.
சிவாஜி நடித்த முதல் படமான பராசக்தி தொடங்கி, பணம், வீரபாண்டிய கட்டபொம்மன், பந்த பாசம், அன்னை இல்லம் உள்ளிட்டட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள வி.கே.ராமசாமி, 1962-ம் ஆண்டு வெளியான குடும்ப தலைவன் படத்தின் மூலம் முதன் முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்த வி.கே.ராமசாமி வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டரில் நடித்துள்ளார்.
1974-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான உரிமைக்குரல் படத்தில் அவருடன் நடித்திருந்த வி.கே.ராமசாமி, ஒருமுறை, படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது குடி போதையில் வந்த இவர், இருவருக்கும் இடையில் அமர்ந்து பேச தொடங்கியுள்ளார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் இப்படி எதாவது தனக்கு பிடிக்காத செயலை செய்தால், அவரை முற்றிலும் வெறுக்கும் குணம் கொண்டவர் எம்.ஜி.ஆர். குறிப்பாக குடி எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத பழக்கம்.
இதன் காரணமாக அன்று முதல் வி.கே.ராமசாமி எம்.ஜி.ஆர் செட்டில் இருக்கமாட்டார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் மறுநாள் அவரை அழைத்த எம்.ஜி.ஆர் பழைய நடிகர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர். உடலை பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு உடல் மிகவும் முக்கியம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். அன்று முதல் எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளத்தில் வி.கே.ராமசாமி மது அருந்தும் பழக்கதையே விட்டொழித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“