தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் சக நடிகை வி.என்.ஜானகியை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் இவர்கள் திருமணத்திற்கு ஜானகி வீட்டில் ஒப்புக்கொள்ளாத நிலையில், இது தொடர்பாக நடந்த வழக்கில் எம்.ஜி.ஆர் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்டவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து பலகட்ட முயற்சிக்கு பின் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், சினிமாவிற்கு வநது 10 வருடங்களுக்கு பிறகுதான் நாயகனாக நடிக்க தொடங்கினார். சினிமாவில் படிப்படியாக உச்சம் தொட்ட எம்.ஜி.ஆர் பிறகு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என ஒரு சில மெகாஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்த எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரர். சினிமாவின் மூலம் மக்ளுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை எடுத்து சொன்ன எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதேபோல் சக நடிகையாக இருந்த வி.என்.ஜானகியை காதலித்த எம்.ஜி.ஆர் ஜானகியின் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்துகொண்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் பல படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவர் ரமேஷ் கண்ணா. இவரின் அப்பா நாராயணன். இந்த நாராயணனின் தங்கை மகள் தான் வி.என்.ஜானகி. நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு அத்ததை மகள். வி.என்.ஜானகி சினிமாவில் அறிமுகமாகும்போது எம்.ஜி.ஆர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்தவர். வி.என்.ஜானகி, நடித்த பெரிய வெற்றிப்படமான ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு ராஜகுமாரி படத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆருக்கும் ஜானகிக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், ரமேஷ் கண்ணாவின் அப்பாவிடம் வந்து எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகியை பெண் கேட்டுள்ளார். அப்போது அவர் நீ சொத்துக்கான ஆசைப்பட்டு பெண் கேட்கிறாய் என்று சொல்லி, இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகும் எம்.ஜி.ஆர் தனது முயற்சியை கைவிடாத நிலையில், ரமேஷ் கண்ணாவின் அப்பா எம்.ஜி.ஆர் மீது கேஸ் கொடுத்துள்ளார்.
இந்த கேஸில் அவரே வாதாடி எம்.ஜி.ஆருக்கு எதிராக வெற்றியும் பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் தோல்வியை சந்தித்த கேஸ் இதுதான். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார். இந்த கேஸ்க்கு பின், எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ தொடங்கினர். 14 வருடங்களுக்கு பிறகுதான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“