முன்னணி நடிகை ஒருவருடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்றுளு ஆசைப்பட்ட ஜெமினி கணேசனின் ஆசை நிறைவேறிய தருணத்தில் அந்த படத்தில் இருந்து நடிகை பாதியில் விலகிவிட்டார்.
1955-ம் ஆண்டு எல்.வி பிரசாத் இயக்கத்தில் வெளியான பெரிய வெற்றிப்படம் மிஸ்ஸியம்மா. ஜெமினிகணேசன், சாவித்ரி இணைந்து நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. நாகி ரெட்டி அல்லூரி சக்கரபாணி ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த படத்தை தயாரிப்பாளர் நாகி ரெட்டியுடன் இணைந்து தயாரித்த அல்லூரி சக்கரபாணி தான் படத்திற்கான கதையை எழுதியிருந்தார். இந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் பானுமதி. படத்தில் நடித்த ஜெமினி கணேசன் இந்த படத்தின்மூலம் இரட்டை மகிழ்ச்சியில் இருந்தார். ஒன்று எப்படியாவது பானுமதியுடன் நடித்துவிட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியது. அதேபோல் அவரின் ஆசை நாயகி சாவித்ரி இந்த படத்தில் 2-வது கதாநாயகி என்பது தான்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தயாரிப்பாளர் நாகி ரெட்டி எப்போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வரமாட்டார் என்றாலும், அல்லூரி சக்கரபாணி அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படப்பிடிப்பு பற்றி கேட்டுக்கொள்வார். அப்படி ஒருநாள் அல்லூரி சக்கரபாணி படப்படிப்பு தளத்திற்கு வந்தபோது, பானுமதி பேசிய வசனங்கள் சக்ரபாணிக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இது குறித்து அவர் பானுமதியிடம் சொல்ல போக, இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மோதல் சரியாகி இருந்தாலும், அடுத்தடுத்து நாட்கள் படப்பிடிப்பில் இது தொடர்பான மோதல்கள் அதிகரித்து வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் பானுமதியை படத்தில் இருந்து நீக்கிவிட்ட சக்ரபாணி அவருக்கு பேசிய சம்பளம் முழுவதையும் கொடுத்துவிட்டார். இதன் காரணமாக படத்தில் 2-வது நாயகியாக நடித்த சாவித்ரி நாயகியாகவும், ஜமுனா என்பவர் சாவித்ரி கேரக்டரிலும் நடித்திருந்தனர்.
பானுமதியுடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெமினி கணேசனுக்கு, அதற்காக வாய்ப்பு கைகூடி வந்தபோதும், இது பாதியில் கைநழுவி போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் இந்த படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்த ஜெமினி கணேசன் இந்தியில் தனது அறிமுக படமாக மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“