இயக்குனரின் பேச்சை கேட்டு நடிக்காத நடிகர் என்ற பெயர் எடுத்திருந்த எம்.ஆர்.ராதா அந்த பெயர் வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கிய உதாரணம் என்று சொன்னால் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கே பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. நாடக உலகில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா அதன்பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தபோதும், நலிவடைந்துள்ள நாடக கம்பெனிகளை தூக்கி நிறுத்தும் வகையில் அவர்களின் நாடகளிலும் நடித்து வந்துள்ளார்.
அப்படி நாடகங்களில் நடிக்கும்போது தான் சிவாஜிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகவேல் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என்று பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றும் ஒரு முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பல படங்களில் வில்லன் குணச்சித்திரம் என நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.
1937-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான படம் ராஜசேகரன். எம்.ஆர்.ராதா சகாதேவன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ராஜம் புஷ்பவனம் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சக நடிகராக சகாதேவனுக்கு எம்.ஆர்.ராதா நடிப்பு சொல்லி கொடுத்துள்ளார். இதை பார்த்த இயக்குனர் பிரகாஷ், இந்த படத்திற்கு நான் இயக்குனரா இல்லை நீ இயக்குனரா என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட எம்.ஆர்.ராதா இந்த படத்திற்கு நீங்கள் தான் இயக்குனர் என்று எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த சந்தேகம் உங்களுக்கு ஏன் வந்தது என்று கேட்க, கோபமாக பிரகாஷ், அப்படியா என்று கேட்டுவிட்டு சென்றுள்ளார். ஆனாலும், எம்.ஆர்.ராதா இப்படி கேட்டதை மனதில் வைத்திருந்த இயக்குனர் பிரகாஷ், ஒருநாள், 3வது மாடியில் இருந்து கீழே இருக்கும் குதிரையில் குதித்து குதிரையை ஓட்டி செல்ல வேண்டும் இந்த காட்சியை உன்னால் செய்ய முடியுமா என்று கேட்க, உடனடியாக ஒப்புக்கொண்ட எம்.ஆர்.ராதா கடகடவென 3-வது மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து சரியாக குதிரைமேல் குதித்த எம்.ஆர்.ராதா குதிரையையும் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அவர் விழுந்துவிடுவார் என்று நினைத்த இயக்குனர் பிரகாஷ்க்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆனாலும் ஷாட் சரியாக வரவில்லை என்று கூறி எம்.ஆர்.ராதாவை மீண்டும் அதேபோல் செய்யுமாறு கூறியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷாட் சரியாக வந்துள்ளது என்று சொல்லியும், இயக்குனர் பிரகாஷ் மீண்டும் எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பிரகாஷின் திட்டத்தை புரிந்துகொண்ட எம்.ஆர்.ராதா மீண்டும் அப்படியே குதிக்க இந்தமுறை, குதிரை சற்று நகர்ந்துவிட்டதால், கீழே விழுந்து காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே மயங்கிய எம்.ஆர்.ராதா கண்விழித்து பார்த்தால் மருத்துவமனையில் இருந்துள்ளார். இயக்குனர் பிரகாஷின் புண்ணியத்தால் நான் ஒன்னறை ஆண்டுகள் மருத்துவமனையில் நடக்க முடியாமல் இருந்தேன். அதில் இருந்து எந்த இயக்குனர் சொல்வதையும் நான் கேட்பதில்லை என்று கூறியுள்ளதாக இயக்குனரும் பாத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“