எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ஒரே படமாக அன்பே வா படத்தின் படப்பிடிப்பின்போது பாடல் எழுதியது குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கவிஞர் வாலி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் சரிவை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர் ஏ.வி.எம். நிறுவனத்தில் நடித்த ஒரே படமான இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
தான் திரைத்துறையில் அறிமுகமான புதிதில் ஒரு சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தாலும், அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் எம்.எஸ்.வி தனது கற்பகம் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், வாலிக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்ப கொடுத்த எம்.எஸ்.வி அவர் மீது அபார நம்பிக்கையுமு் வைத்துள்ளார்.
அந்த நம்பிக்கையில் அன்பே வா படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டை கொடுத்த எம்.எஸ்.வி, வாலி பாடலை எழுதிவிடுவார் என்ற நம்பிக்கையில், பாடலின் முழு இசையையும் முடித்துள்ளார். ஆனால் கடைசி வரை வாலிக்கு வார்த்தைகள் வரவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.எஸ்.வி – வாலி இருவரும் வேறு மெட்டு போடலாம் என்று யோசித்து அதை செய்துள்ளனர். அந்த பாடல் தான் ‘அன்பே வா’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வாலி 1000 நிகழ்ச்சியில், எம்.எஸ்.வி கலந்துகொண்ட நிலையில், அப்போது வாலி இந்த தகவலை கூறியுள்ளார். வாலி பல மேடைகளில் எம்.எஸ்.வி பற்றி புகழ்ந்து பேசியுள்ள நிலையில், நான் இப்போது இப்படி இருக்கிறேன் என்றால் அது வாலி இட்ட பிச்சை என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“