க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பாரதிதாசன் பாடலுக்கு மெட்டு அமைத்ததை கேட்டு பாரதிதாசனே பாராட்டி கூறிய வார்த்தையை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
Advertisment
க்ளாசிக் தமிழ் சினிமாவில், மெல்லிசை மன்னனாக திகழ்ந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், அப்போதைய அறிமுக நடிகர்களாக வந்த பலருக்கும் தனது இசையின் மூலம் வெற்றிகளை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளா.
அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் எம்.எஸ்.வி இணைந்த பல படங்கள் ரசிகர்களின் மனதிற்கு இனிமையான பாடல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் 1965-ம் ஆண்டு வெளியான ஒரு படம் தான் பஞ்சவர்ணக்கிளி. ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், மனோராமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.சங்கர் இயக்கிய இந்த படத்திற்கு வலம்புரி சோமநாதன் கதை எழுதியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திறகு கவிஞர் வாலி பாடல்கள் எழுதியிருந்தார். இதில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘’தமிழுக்கும் அமுதென்று பெயர்’’ என்ற பாடலுக்கு மெட்டு அமைத்து எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்காக பயன்படுத்தியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதே சமயம் இந்த பாடலை படத்திற்காக பயன்படுத்த முடிவு செய்த எம்.எஸ்.வி, அதற்காக பல டியூன்களை போட்டுள்ளார். இதில் 2 டியூன்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், பாரதிதாசனே இந்த பாடலுக்கான டியூனை தேர்வு செய்துள்ளார். அந்த டியூனை எம்.எஸ்.வி வாசிக்க, அதை கேட்ட பாரதிதாசன், தமிழ் அமுதுக்கு சமம் என்பது நீ போட்ட மெட்டின் மூலம் தான் எனக்கு தெரியவருகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்துள்ளார்.
1891-ம் ஆண்டு பிறந்த பாரதிதாசன், தனது கவித்துவத்தின் மூலம் பல பாடல்கள், புரட்சி கவிதைகள் எழுதிய நிலையில், 1964-ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மரணத்திற்கு பின்பே பஞ்சவர்ணக்கிளி படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.