இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், ஒருமுறை பாரதியார் எழுதிய பாடலுக்கு இசையமைக்கும்போது கண்ணதாசன் தான் பாடலை எழுதினார் என்று நினைத்துக்கொண்டு வரிகளை மாற்றி கொடுக்குமாறு எம்.எஸ்.வி கேட்க, கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
Advertisment
கடந்த 1965-ம் ஆண்டு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் கை கொடுத்த தெய்வம். சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சாவித்ரி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் பாரதியார் எழுதிய சிந்து நதியின் இசை நிலவினிலே என்ற பாடலை படத்தில் பயன்படுத்தியிருப்பார்.
திருமணம் ஆகாமல் இருக்கும் சாவித்ரியை திருமணம் செய்துகொள்ள நினைக்கும் சிவாஜி கணேசனுக்கு பல தடைகள் வருகிறது. இறுதியில் இந்த திருமணம் நடந்ததா? சாவித்ரிக்கு வந்த தடைகளுக்கு காரணம் என்ன என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. சிவாஜி – எஸ்.எஸ்ராஜேந்திரன் இருவரும் இந்த படத்தில் நெருங்கிய நண்பர்களாக நடித்திருப்பார்கள். இவர்களின் நட்பு தொடர்பான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
சிவாஜி – எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நிலையில், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்னை எஸ்.எஸ்.ராஜேந்திரன் திருமணம் செய்துகொள்வார். அதன்பிறகு மூவரும் ஒரே வீட்டில் வசிக்கும்போது, எஸ்.எஸ்.ராஜேந்திரன் – அவரது மனைவிக்கும் தனிமை கொடுக்க வேண்டும் என்று நினைத்து சிவாஜி கணேசன் இரவில் வெளியில் சென்றுவிடுவார். அப்போது ‘’சிந்து நதியின் இசை நிலவினிலே’’ என்ற பாடல் வரும்.
இந்த பாடலுக்கு இசையமைக்கும்போது கண்ணதாசன் அங்கு வர, கவிஞரே இந்த பாடலில் ஒரு வார்த்தையை மாற்றி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான கண்ணதாசன் டேய் விசு அது நான் எழுதிய பாடல் இல்லை பாரதி எழுதிய பாடல் என்று சொல்ல ஓஹோ அப்படியா அப்போ பாரதியை வர சொல்லுங்க மாற்றிக்கொள்ளலாம் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார். இது பாரதியார் எழுதிய பாடல். இதை மாற்றினால் உன்னையும் என்னையும் நாட்டை விட்டே மாற்றிவிடுவார்கள் என்று சொல்ல, அதன்பிறகு எம்.எஸ்.வி புரிந்துகொண்டு அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“