கண்ணதாசன் சொல்ல, சொல்ல, பாடலை எழுதிய அவரது உதவியாளரான பஞ்சு அருணாச்சலம், ஒரு வார்த்தையில் ஒரு எழுத்தை தவறாக எழுதியதால், அந்த பாடல் இன்றுவரை பிழை திருத்தம் செய்யப்படாமல் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், கவிஞர், இயக்குனர், நடிகர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் அடங்கிய பல பாடல்களை கொடுத்துள்ள இவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து காலத்தால் அழியாத பல பாடல்களை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல்கள் காலம் கடந்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் அமைந்த ஒரு பாடல் தான் ‘’ஓடம் நதியினிலே’’ என்ற பாடல். 1962-ம் ஆண்டு டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் வெளியான படம் காந்திருந்த கண்கள். சாவித்ரி, ஜெமினி கணேசன், இணைந்து நடித்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘’ஓடம் நதியினிலே’’ பலரின் கவனத்தை ஈர்த்தது.
பொதுவாக தான் பாடல் எழுத போகும்போது, பாடல் வரிகளை சொல்ல, கண்ணதாசனின் உதவியாளர்கள் தான் பாடலை எழுதுவார்கள். அந்த வகையில், இந்த பாடலை எழுதும்போது, ‘’ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’’ என்று கண்ணதாசன் வேகமாக சொல்லிக்கொண்டே போக, பாடலை எழுதிய உதவியாளர் பஞ்சு அருணாச்சலம், கரையினிலே என்பதற்கு பதிலான தரையினிலே என்று எழுதியுள்ளார். எம்.எஸ்.வியும் டியூனுக்கு வார்த்தை கிடைக்கிறதா என்பதை மட்டும் சரி பார்த்துவிட்டு, பாடலை பதிவு செய்துள்ளார்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இநத பாடலை கவனித்த ஒருவர், கண்ணதாசனிடம் சென்று, இவ்வளவு பெரிய கவிஞர் நீங்கள் என் இப்படி பாடல் எழுதினீர்கள் என்று கேட்டுள்ளார். நல்லாத்தனே எழுதி இருக்கிறேன் என்று கண்ணதாசன் சொல்ல, ஓடம் நதியினிலே என்று சொல்லிவிட்டு ஒருத்தி மட்டும் தரையினிலே என்றால் என்ன அர்த்தம் கவிஞரே என்று கேட்க, அப்படியா உள்ளது என்று அப்போது தான் தனது தவறை உணர்ந்துள்ளார் கவியரசர் கண்ணதாசன்.
அதன்பிறகு இந்த பாடலை மீண்டும் ரெக்கார்டு செய்ய வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னாலும், அந்த காலத்தில் பாடல் பாடும்போது ஒரு பிழை ஏற்பட்டாலும் அந்த முழு பாடலையும் மீண்டும் பாட வேண்டிய சூழல் இருந்தால், அதிகமாக செலவாகும் என்று கூறி, வேண்டாம் யாராவது கேட்டால் சொல்லிக்கொள்வோம் என்று கரையினிலே என்பதை தரையினிலே என்றே பாடலில் வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பாடல் இன்னும் அதே வார்த்தையில் தான் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“