கவிஞராக பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், பாடகராக ஒரு பாடலை பாட வேண்டும் என்று நினைத்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி கடைசி வரை வாய்ப்பு கொடுக்கவே இல்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாவமன்னிப்பு. சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட கண்ணதாசனுக்கு சினிமாவில் பாடல் பாட வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இந்த பாவ மன்னிப்பு படத்தின் கம்போசிங் நடைபெற்றபோது, ‘’மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்’’ என்ற படலை எழுதிய கண்ணதாசன், தானே பாட விரும்பியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று. விசு இந்த பாடலை நானே பாடுகிறேன். நான் பாடும் அளவுக்கு எளிமையாக டியூன் போடு என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி, இங்கு பாடுவதற்கு நிறையபேர் இருக்காங்க அண்ணே நீங்கள் பாடல் மட்டும் பாடுங்க என்று கூறியுள்ளார். ஆனாலும், விடாத கண்ணதாசன் நான் தான் இந்த பாடலை பாடுவேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி உங்கள் குரல் சிவாஜி கணேசனுக்கு செட் ஆகாது என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு கண்ணதாசன் சமாதானம் ஆக, டி.எம்.சௌந்திரராஜனை வைத்து அந்த பாடலை பதிவு செய்துள்ளார் எம்.எஸ்.வி. இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு குரல் கொடுத்த டி.எம்.சௌந்திரராஜன் கண்ணதாசனுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
கண்ணதாசன் கதை திரைக்கதை எழுதிய ரத்த திலகம் படத்தில் கல்லூரி விழா ஒன்றில் முன்னாள் மாணவர் பாடல் பாடுவது போன்ற ஒரு காட்சி அமைந்திருக்கும் இந்த காட்சியில் கண்ணதாசன் தோன்றி ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’’ என்ற பாடலை பாடியிருப்பார். உண்மையில் இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடியிருந்தார். கண்ணதாசனின் வரிகளுக்கு குரல் கொடுத்த அவர் இறுதியில் கண்ணதாசனுக்கே குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“