எம்.ஜி.ஆருக்கு புகழ்... சரோஜா தேவிக்கு கிண்டல் : ஒரே பாடலில் வித்தை காட்டிய கண்ணதாசன்
எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து வரிகளை எழுதியிருந்த கண்ணதாசன், சரோஜா தேவியை கிண்டல் செய்து பாடல் எழுதியிருப்பார்.
தமிழ் சினிமாவில் தனது பாடல் வரிகள் மூலம் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் கவிஞர் தான் கவியரசர் கண்ணதாசன். க்ளாசிக் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், சோகம், மகிழ்ச்சி, என மனிதனின் அத்தனை உணர்வுகளுக்கும் தனது வரிகளால் உயிர் கொடுத்துள்ளார். அதேபோல் பாடல்கள் மூலம் சிலரை கிண்டல் செய்வதும், சிலரை புகழ்வரும் கவியரசருக்கு கை வந்த கலை.
Advertisment
அந்த வகையில், எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து வரிகளை எழுதியிருந்த கண்ணதாசன், சரோஜா தேவியை கிண்டல் செய்து பாடல் எழுதியிருப்பார்.
1963-ம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பணத்தோட்டம். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார், அசோகன், நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் பேசுவது கிளியா என்ற பாடல், இன்றைய சினிமா ரசிகர்களுக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த பாடலில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாராட்டி எழுதிய கண்ணதாசன், சரோஜா தேவியை கிண்டல் செய்து வரிகளை அமைத்திருப்பார். முழுக்க, முழுக்க கேள்விகளால் அமைந்த இந்த பாடலில் ஒரு இடத்தில் கூட பதில் தருவது போன்ற வரிகள் இருக்காது.
இந்த பாடலின் முதல் வரியில் பாடுவது கிளியா என்ற வரிகள், சரோஜா தேவி அப்போது தமிழை சரியாக பேசாமல் கிளி போல் கொத்தி கொத்தி பேசியதால் எழுதிய வரிகள் என்று சொல்லலாம். அடுத்து சரோஜா தேவி பாடுவது போல் வரும் வரிகளில், பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா என்று பாடியிருப்பார். இதில் எம்.ஜி.ஆரை புகழ்ந்திருப்பார் கண்ணதாசன்.
இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாடலின் அனைத்து வரிகளும் கவிதை வடிவில் இருந்தாலும், முழுக்க முழுக்க கேள்விகளால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“