தமிழ் க்ளாசிக் சினிமாவின் புதுமை இயக்குனராக வலம் வந்தவர் ஸ்ரீதர். 1959-ம் ஆண்டு வெளியான ஜெமினி கணேசனின் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஸ்ரீதர் அடுத்து, மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அவர், 1962-ம் ஆண்டு நெஞ்சில் ஓர் ஆலையம் என்ற படத்தை இயக்கினார். கல்யாண் குமார் தேவிகா முத்துராமன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். கண்ணதான் – எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்தால் அந்த படமும் வெற்றி பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்ற நிலை இருந்த காலக்கட்டத்தில் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. அதேபோல் எம்.எஸ்.வி – கண்ணதாசன் இருவரும் இணைந்தால் கம்போசிங்கின்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த படத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெஞ்சில் ஓர். ஆலயம் படத்திற்கான பாடல் கம்போசிங் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது. கண்ணதாசன் எம்.ஸ்.வி இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோருடன் மேலும் சிலர் இதில் பங்கேற்றனர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் காலையில் சீக்கிரமாக வந்து கம்போசிங்கை முடித்துவிடலாம் என்று முடிவு செய்து இயக்குனர் ஸ்ரீதர் அனைவரையும் காலையில் வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து எம்.எஸ்.வி தனது அறைக்கு சென்று படுத்தபோது பக்கத்து அறையில் பாட்டும் சத்தமுமாக இருந்துள்ளது. இதனால் கடுப்பான எம்.எஸ்.வி அங்கு சென்று பார்த்தால், கண்ணதாசன் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து மேலும் கடுப்பான எம்.எஸ்.வி கவிஞரே நாளைக்கு காலையில் கம்போசிங் இருக்கு இப்படி செய்தால் நாளைக்கு எப்படி பாடலை முடிக்க முடியும் என்று கேட்க, நான் காலையில் சொன்ன டைம்க்கு வந்துடுவேன் விசு நீ கவலைப்படாதே போய் தூங்கு என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.எஸ்.வி தனது அறையில் வந்து படுத்தாலும் அந்த சத்தத்தின் காரணமாக அவருக்கு தூக்கம் வரவில்லை. விடியற்காலை 2 மணியளவில் கண்ணதாசன் தனது நண்பர்களை அனுப்பிவிட்டாலும் அதன்பிறகு ஒரு ஃபுல் பாட்டிலுடன் எம்.எஸ்.வி அறையில் வந்து சோபாவில் அமர்ந்துள்ளார். இதை பார்த்த எம்.எஸ்.வி என்ன கவிஞரே இப்படி பண்றீங்க இயக்குனர் ஸ்ரீதருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்ல, ஸ்ரீதருக்கு நீ சொன்னால் மட்டும் தான் தெரியும். அதனால் அவரிடம் போய் இதுப்பற்றி எதுவும் உளறி வைக்காதே என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் தனது அறைக்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை 7 மணிக்கு இயக்குனர் ஸ்ரீதர் எம்.எஸ்.வி இருவரும் கம்போசிங்கு ரொடியாக இருந்தபோதும் கண்ணதாசன் வரவில்லை. இதனால் கடுப்பான ஸ்ரீதர் எம்.எஸ்.வியிடம் கேட்க, அவர் இரவு நடந்த அத்தனை விஷயங்களையும் கூறியுள்ளார். இதை கேட்ட ஸ்ரீதர் கண்ணதாசன் அறையில் சென்று பார்க்கலாம் என்று போக அந்த நேரத்தில் கண்ணதாசன் நான் ரெடி நீங்க ரெடியா என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்துள்ளார். இதை பார்த்து இயக்குனர் ஸ்ரீதர் கம்போசிங் வச்சிக்கிட்டு இப்படி லேட்டா வரீங்களே என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் என்று சொல்ல, பொய் சொல்லாதீங்க நைட் என்ன நடந்துச்சுனு எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல கண்ணதாசன் எம்.எஸ்.வி யை பார்க்கிறார். ஆனால் அவர் கண்ணதாசனை பார்க்கவே இல்லை. அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.வி டியூன் போட, தன்னை இயக்குனரிடம் மாட்டி விட்ட எம்.எஸ்.வி-க்கும் படத்தின் சுட்சிவேஷனுக்கும் தகுந்தபடியான ஒரு பாடலை கொடுக்கிறார் கண்ணதாசன்.
அந்த பாடல் தான் ‘’சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே’’ இந்த வரிகளை கேட்ட எம்.எஸ்.வி அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் தத்தளிக்க, இயக்குனர் ஸ்ரீதரோ இருவரையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“