திரைத்துறையில் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பாடலை உருவாகக் குறைந்தது 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்றாலும், க்ளாசிக் சினிமா காலத்தில் அரை நாளில் ஒரு பாடலை பதிவு செய்து அடுத்த நாள் அந்த பாடலுக்கான காட்சியை படமாக்கும் வேலைகள் நடந்துள்ளது என்பது ஆச்சரியமான ஒரு உண்மை.
Advertisment
க்ளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது மெல்லிசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து பல மெகாஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வந்த பெரும்பாலான பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அனைவரும் ரசித்து கேட்கும் வகையில் அமைந்துள்ளது.
இசையிலும் பாடல்களிலும் இவர்கள் இருவரும் பல சிறப்புகளை செய்திருக்கும் நிலையில், ஒரு படத்தின் பாடலுக்கான காட்சியை இயக்குனர் சொல்ல, அதற்கு அரைமணி நேரத்தில் மெட்டு அமைத்து அதற்கான பாடலை எழுதி, பதிவு செய்து அடுத்த நாள் படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்துள்ளார் எம்.எஸ்.வி என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் இது உண்மையாக நடந்த சம்பவம்.
கடந்த 1965-ம் ஆண்டு பா.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ஆனந்தி. எஸ்.எஸ்.ராஜேந்திரன். சி.ஆர் விஜயகுமாரி இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ.வி இசையமைத்திருந்தார். கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக குற்றாலம் சென்றிருந்த இயக்குனர் நீலகண்டன், இங்கு ஒரு பாடல் காட்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து உடனடியாக எம்.எஸ்.விக்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.எஸ்.வி பாடலுக்கான சூழ்நிலையை கேட்டுக்கொண்டு அரைமணி நேரத்தில் மெட்டு போட்டுவிட்டு, உடனடியாக கண்ணதாசனை அழைத்து பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். அவரும் உடனடியாக பாடல் எழுத, அன்று மதியமே பாடல் பதிவு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட பணிகளை முடித்த எம்.எஸ்.வி பாடலை பதிவு செய்து, குற்றாலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பாடலை வைத்து மறுநாள் அதற்கான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இயக்குனருக்கு திடீரென வந்த யோசனையை புரிந்துகொண்டு எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் இணைந்து அரைநாளில் ஒரு ஹிட் பாடலை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். அந்த பாடல் தான் ஆனந்தி படத்தில் இடம்பெற்ற ‘’குளிருது என்று தொடங்கும் பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“