எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தில் பாடல் எழுத வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்த கவிஞர் ஒருவருக்கு எழுதாளர் ஒருவரின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்து முதல் பாட்டிலேயே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி எம்.ஜி.ஆர் ஆகிய இருவரையும் வியக்க வைத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து முதல்வராக அமர்ந்து அசத்தியவர் தான் எம்.ஜி.ஆர். தனது ஆரம்ப கால படங்களில் கவியரசர் கண்ணதாசன் மூலமாக தனது பாடல்களை உருவாக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டதால், கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.
கண்ணதாசன் விமர்சனம் செய்தாலும், அவர் இல்லாமல் எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் இல்லை என்ற நிலையும் இருந்தது. இதனிடையே கடந்த 1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய பூமி என்ற படம் வெளியானது. இந்த படத்தில் 3 பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அப்போது ஒருநாள் இந்த படத்தின் கதாசிரியரும், கவிஞர் பூவை செங்குட்டுவனும் பேசிக்கொண்டு செல்லும்போது எம்.ஜி.ஆர் பாடினால் நன்றாக இருக்கும் இப்படி ஒரு பல்லவி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
‘’நான் உங்கள் வீட்டு பிள்ளை, இது ஊரறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை என்று வரிகளை சொல்ல, இந்த வரிகள் பிடித்துபோது குகநாதன், உடனடியாக எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரும் பல்லவியை கேட்டுவிட்டு எழுத சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கம்போசிங்கில் இந்த பல்லவியை மாற்றாத இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, சரணத்திற்கு ஒரு டியூனை கொடுத்து எழுதுமாறு பூவை செங்குட்டுவனிடம் கொடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
அவர் கொடுத்த டியூனை வைத்துக்கொண்டு ஒரு பேப்பரில் டம்மியாக சில வார்த்தைகளை எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன். இதை பார்த்த எம்.எஸ்.வி, வாத்தியார் ஐயா என்ன எழுதுறீங்க என்று கேட்க, நீங்கள் கொடுத்த டியூனுக்கு டூப்பு வரி எழுதுகிறேன் என்று செங்குட்டுவன் சொல்ல, அதை வாங்கி படித்துள்ளார் எம்.எஸ்.வி. அந்த வார்த்தைகளை பார்த்து என்ன வாத்தியார் ஐயா அற்புதமாக இருக்கிறது இதை டூப்பு வார்த்தை என்று சொல்றீங்களே என்று அந்த டூப்பு வார்த்தைகளையே சரணமாக பயன்படுத்தி அந்த பாடலை பதிவு செய்துள்ளார் எம்.எஸ்.வி.
இப்படி ஒரு ஒற்றை பாடலில் எம்.ஜி.ஆர் எம்.எஸ்.வி இருவரையுமே வியக்க வைத்தவர் தான் பூவை செங்குட்டுவன். இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு இன்றும் ஒரு சிறந்த பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“