மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் நடித்த ஒரு படத்தில் ஒரு பாடலை நான்தான் இசையமைப்பேன் என்று அடம் பிடித்து 4 டியூன்களை ஒரே பாடலில் பயன்படுத்தி அசத்தியிருப்பார். இந்த தகவலை அந்த படத்தின் இயக்குனகரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னராக கொடிகட்டி பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் விவேக் இணைந்து நடித்த காதல் மன்னன் படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் கண்ணதாசனின் தீவிர ரசிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனரும் நடிகர் விவேக்கும் எம்.எஸ்.வியிடம் பேசியுள்ளனர்.
அவர் படத்தில் நடிக்க மறுத்தாலும், அவரை விடாத நடிகர் விவேக் நீங்கள் கட்டாயம் நடித்தேதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியதால் நடிக்க ஒப்புக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் தனக்கு சம்பளமாக 10 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு இயக்குனர் சரணும் சம்மதம் கூறியுள்ளார். அப்போது எம்.எஸ்.வி எனக்கு 5 லட்சம் ராமமூர்த்திக்கு 5 லட்சம். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்பது ஒரு ப்ராண்ட் எங்களை பிரிக்காதீங்க என்று எம்.எஸ்.வி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்பிறகு படத்தில் நடிக்க தொடங்கிய எம்.எஸ்.வி, படத்தின் கண்ணதாசன் பெயரில் மெஸ் நடத்தி வரும் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் ஒரு பாடல் ‘மெட்டு தேடி’. இந்த பாடலை கேட்ட எம்.எஸ்.வி இந்த பாடலுக்கு நான் தான் இசையமைப்பேன் என்று கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு இயக்குனர் சரணும் ஒப்புக்கொள்ள, எம்.எஸ்.வி டியூன் போட தொடங்கியுள்ளார். அப்போது இயக்குனர் சரண் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
அப்போது எம்.எஸ்.வி 4 டியூன்களை போட்டுள்ளார். இதில், இயக்குனர் சரணுக்கு 2 டியூன்களும், நடிகர் விவேக்குக்கு 2 டியூன்களும் பிடித்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் இந்த டியூன் தான் பாடலில் வரவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது எம்எஸ்.வி, தம்பி சண்டை போட்டுக்காதீங்க, 4 டியூனும் படத்தில் வரும் என்று கூறிவிட்டு அந்த பாடலை கம்போசிங் செய்துள்ளார். இந்த பாடலை அவரே பாடியும் வெற்றி கண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“