தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் வாலி, எழுதிக்கொடுத்த ஒரு டூயட் பாடலை கேட்ட எம்.எஸ்.வி இது வேண்டாம் என்று கூறிய நிலையில், அதே பாடலை மற்றொரு இசையமைப்பாளரிடம் கொடுத்து ஹிட் ஆக்கியுள்ளார் கவிஞர் வாலி.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி உட்பட 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்தவர் கவிஞர் வாலி. தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்ட அவர், தற்போதைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் கருத்து மோதல் காரணமாக எம்.ஜி.ஆரை பிரிந்தபோது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, பி.ஆர் பந்தலு இயக்கிய ஒரு படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும்போது ஒரு டூயட் பாடலை எழுதி கொடுத்துள்ளார். இந்த பாடலை பார்த்த எம்.எஸ்.வி பல்லவி ரொம்ப நீளமாக இருகே வேற பாடல் எழுதிக்கொடு என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.வி வார்த்தைக்கு மறுப்பேச்சு பேசாத வாலி, உடனடியாக அடுத்த பாடலை எடுதி கொடுத்துள்ளார். அன்று மாலையில், அதே எம்.ஜி.ஆர் நடிக்கும் அரசக்கட்டளை படத்தின் கம்போசிங்க்கு சென்றுள்ளார் வாலி. இந்த படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். அப்போது அவரும் ஒரு டூயட் பாடல் வேண்டும் என்று கேட்க, எம்.எஸ்.வி வேண்டாம் என்று சொன்ன அந்த பாடலை கே.வி.மகாதேவனிடம் கொடுத்துள்ளார் வாலி. இதை பார்த்த மகாதேவன் அந்த பாடலுக்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளார்.
அந்த பாடல் தான் ‘’புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்’’ என்ற பாடல். எம்.ஜி.ஆர் படத்திற்கு இந்த பாடலை எம்.எஸ்.வி நிராகரித்தாலும், அதே எம்.ஜி.ஆரின் மற்றொரு படத்திற்கு அந்த பாடலை கொடுத்து ஹிட் பாடலாக மாற்றியுள்ளார் கவிஞர் வாலி. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“