திரைத்துறையில் கவிஞரான தனது வாய்ப்பு கொடுத்து தனக்கு வாழ்வளித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று கவிஞர் வாலி பல மேடைகளில் கூறியிருக்கும் நிலையில், அவரிடம் பந்தையம் கட்டி வாலி வெற்றி பெற்றது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்தபோது. கண்ணதாசனின் ''மயக்கமா கலக்கமா'' என்ற பாடலை கேட்ட வாலி ஊருக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்துள்ளார். அதன்பிறகு எம்.எஸ்.வி அறிமுகம் கிடைத்து பின்னாளில் பெரும் கவிஞரான உருவெடுத்து கண்ணதாசனின் அன்பை பெற்றவர் தான் வாலி.
இதனிடையே ஒருமுறை, ஸ்டூடியோவுக்கு வந்த வாலி அமர்ந்திருக்க, இயக்குனர் கே.சங்கர், தயாரிப்பாளர் வேலுமணி, இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது எம்.எஸ்.வி, தனது தங்க வாட்ச், மோதிரம், செயின் ஆகியவற்றை கழற்றி ஹார்மோனியத்தில் வைத்துவிட்டு என்னை வியக்க வைக்கும் அளவுக்கு பல்லவி சொன்னால் இந்த மூன்றும் உனக்குதான் என்று சொல்ல, அருகில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். வாலியும் அதனை ஒப்புக்கொண்டார்.
இப்போது அனைவரும் வாலி என்ன பல்லவி சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்போது, வெற்றிலைபாக்கு போட்ட வாலி, ஒரு சில நிமிடங்கள் கழித்து ஒரு தாளில் ஒரு பல்லவியை எழுதி எம்.எஸ்.வியை பார்த்து சிரித்துக்கொண்டே கொடுத்துள்ளார். சுற்றி இருப்பவர்கள் என்ன பல்லவி என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்த நிலையில், எம்.எஸ்.வி அந்த பல்லவியை படிக்கிறார். படித்து முடித்தவுடன் வாலியை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த மொதிரம், செயின் வாட்ச் என அனைத்தையும் கொடுத்துள்ளார்.
இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட வாலி எனக்கு இதெல்லாம் தேவையில்லை அண்ணா. உங்கள் அன்பும் ஆதரவும் தான் தேவை என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் என்ன பல்லவி என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்க, ஒரு அற்புதமான பல்லவி கொடுத்துள்ளார் என்று எம்.எஸ்.வி இயக்குனர் கே.சங்கரிடம் கூறியுள்ளார். அந்த பல்லவி தான் ‘’காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கி போனால் அந்த கன்னி என்ன ஆனாள்’’ என்ற பாடல்.
இந்த பல்லவியை எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி நடிப்பில் வெளியாக கலங்கரை விளக்கம் என்ற படத்தில் தான் இந்த பாடல் அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“