கவிஞர் வாலிக்கு வாழ்க்கை கொடுத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் என்றாலும் கூட ஒரு பாடலுக்கான அவரிடமே மோதலில் ஈடுபட்டுள்ளார் வாலி.
1971-ம் ஆண்டு ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ஒரு தாய் மக்கள். எம்.ஜி.ஆர், முத்துராமன், ஜெயலலிதா ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வாலி கண்ணதாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்பட்டபோது, அதற்கு கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதியுள்ளார்.
வாலி எழுதிய இந்த பாடல், இயக்குனர், தயாரிப்பாளர் இருவருக்கும் பிடித்து போகிறது. ஆனால் இசைமைப்பாளர் எம்.எஸ்.விக்கு பிடிக்காத நிலையில், அவர் பல்லவியை மாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும், இந்த பல்லவி நன்றாகத்தான் இருக்கிறது. இதையே வைத்துக்கொள்வோம் என்று சொன்னாலும், எம்.எஸ்.வி அந்த பல்லவியை மாற்ற வேண்டும் என்று முடிவோடு வாலியை வற்புறுத்தியுள்ளார்.
அதே சமயம் வாலி இந்த பாடல், தயாரிப்பாளர் இயக்குனர், மற்றும் கவிஞரான எனக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்ல, உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தாலும், இசையமைப்பாளர் என்ற முறையில் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல, அதை கேட்ட வாலி, எங்கள் ரசனையும், உங்கள் ரசனையும் வேறாக இருக்கலாம். அதற்காக பல்லவியை மாற்ற முடியுமா என்று கேட்க, கடுப்பான எம்.எஸ்.வி ஹார்மோனியை பெட்டியை மூடி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
அதன்பிறகு படக்குழு, நாம் பேசிக்கொள்வதை விட, இசை மற்றும் பாடல் ஞானம் உள்ள சின்னவர் (எம்.ஜி.ஆர்) வருகிறார் அவரிடம் கேட்போம் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் அங்கு வருகிறார். அவரிடம் வாலி பாடலை கொடுக்க, சிறப்பாக இருக்கிறதே இதையே வைத்துக்கொள்வோம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, குஷியாக சிரிக்க, எம்.எஸ்.வி சற்று கோபமாக இருந்துள்ளார். அதன்பிறகு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கவிஞர் வாலி எழுதிய அந்த பாடல் தான், பாடினால் ஒரு பாட்டு, பால்நிலாவில் நேற்று’ என்ற பாடல். எம்.ஜி.ஆர் முத்துராமன் இருவரும் ஒரு பெண்ணை காதலிக்கும்போது நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து பாடுவது தான் இந்த பாடல். இன்றும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“