தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தனது தனித்துவத்தை அமைத்து அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் திறன் கொண்ட சிவாஜி கணேசனின் நடிப்பை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது இயக்குனர்களை மதிப்பது என சிவாஜி கணேசன் குறித்து பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பிளாக் அன்ட் வொயிட் சினிமா தொடங்கிய டிஜிட்டல் சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி கணேசன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதுமுக நடிகராகவே தன்னை காட்க்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்.
அந்த வகையில் சிவாஜி முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்த முதல் மரியாதை திரைப்படம் குறித்த சுவாஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. வேறு மொழி திரைப்படத்தின் கதையை தழுவி பசும்பொன் என்ற டைட்டிலில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்த பாரதிராஜா சிவாஜி கணேசனிடம் டேட் வாங்கி வைத்துள்ளார். ஆனால் கதை விவாதத்தின்போது அவர்கள் எதிர்பார்த்த திரைக்கதை அமையவில்லை.
இதனால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில், கதாசிரியர் ஆர்.செல்வராஜ் சொன்ன, பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பெண்ணுக்கு அந்த ஊர் பெரிய மனிதர் மீது காதல் என்ற ஒன்லைன் தான் பின்னாளில் முதல் மரியாதை படமானது. இந்த படம் பாரதிராஜா சிவாஜி கணேசன் இருவருக்குமே தங்களது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் பாரதிராஜா அவ்வளவு சந்தோஷமாக இல்லை.
இது குறித்து கேட்டபோது, ஏதோ ஒன்று குறைகிறது என்று சொல்லிவிட்டு, சிவாஜி விக் வைத்தது தான் பிரச்சனை, நாளை முதல் அவரை விக் வைக்க வேண்டாம் மேக்கப் போட வேண்டாம் குளித்துவிட்டு அப்படியே வந்தால் போதும் என்று நேரில் சென்று சிவாஜியை பார்த்து தயங்கியபடி கூறியுள்ளார் பாரதிராஜா. இதை கேட்ட சிவாஜி இதை காலையிலேயே சொல்லியிருக்கலாமே இப்போ ஒரு நாள் ஷூட்டிங் வேஸ்டா போச்சே என்று கூறியுள்ளார்.
அடுத்த நாள் பாரதிராஜா சொன்னபடியே வந்து சிவாஜி கணேசன் நடித்து கொடுக்க, முதல் மரியாதை திரைப்படம் இன்றளவும் பெரிய வரவேற்பை பெற்றும் ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“