நாடக நடிகர், சினிமாவில் துணை நடிகர் என இருந்து பின்னாளில் நாயகயாக உயர்ந்து தமிழ் சினிமாவில் தான் நினைத்ததை செய்யக்கூடிய ஒரு இடத்தில் இருந்த எம்.ஜி.ஆர், தான் இயக்குனராக பணியாற்றி முழு படத்தையும் 10 நாட்களில் முடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, அதன்பிறகு 10 வருடங்களுக்கு மேலாக பல கட்ட முயற்சிக்கு பிறகு நாயகனாக மாறிய எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் எதையும் செய்யக்கூடிய ஒரு இடத்தில் இருந்தார். எம்.ஜி.ஆர் சொன்னால் அதற்கு மறுப்பேச்சு இல்லை என்ற நிலை இருந்தது. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் என்று இருந்த எம்.ஜி.ஆர், ஒரு கடத்தில் விஜயா வாஹினி தயாரிப்பில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.
இது குறித்து நாகி ரெட்டியாரிடம் எம்.ஜி.ஆர் சொல்ல, உடனடியாக இந்த படத்திற்காக கதையை எழுத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அநத கதாசிரியர் பல கதைகளை கூறிய நிலையில், அதில் ஒன்று கூட நாகி ரெட்டியாருக்கு பிடிக்கவில்லை. அப்போது அவர் அடுத்து தேர்தல் வர இருக்கிறது. இது தொடர்பான ஒரு கதையை தேர்வு செய்யலாம் என்று சொல்ல, நல்ல யோசனை என்று அனைவரும் ஏற்க்கொண்டுள்ளனர்.
அப்போது தெலுங்கில் வெளியான கதாநாயகடு என்ற படத்தை பற்றி சொல்ல, எம்.ஜி.ஆர், நாகி ரெட்டியார் என பலரும் அந்த படத்தை பார்த்துள்ளனர். படம் பிடித்திருந்ததால், மறுநாளில் இருந்து அந்த கதாசிரியர், கதாநாயகடு படத்தை தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஜயா வாஹினி ஸ்டூடியோவில் இருந்த 14 படப்பிடிப்பு தளங்களிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்து, அப்போது கதாசிரியருடனே மேக்கப் அறையில் பல நாட்கள் தங்கியுள்ளார் எம.ஜி.ஆர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பு 10 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதில் எம்.ஜி.ஆர் தொடர்பான காட்சிகளை அவரே படமாக்கிய நிலையில், மற்ற காட்சிகளை இயக்குனர் ஜம்பு படமாக்கியுள்ளார். 10 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் தான் நம்நாடு. இந்த படம் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“