சிந்தனைக்குரிய கருத்துக்களை தனது காமெடி காட்சியில் வைத்து மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ் சினிமாவின் சிறந்த சிந்தனைவாதிகளில் ஒருவரான இவர், சிறந்த பகுத்தறிவாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இவரும் எம்.ஜி.ஆரும் சமகாலத்தில் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் எம்.ஜி.ஆர் என்.எஸ்.கே-வை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
அதேபோல் திரைத்துறையில் பலரும் மரியாதை கொடுக்கும், அனைவரும் விரும்பும் ஒரு கேரக்டராக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் பாடகர், பாடல் பாடிக்கொண்டே படங்களில் நடிப்பது என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். மேலும் பல படங்களில் தனது மனைவியுடனே இணைந்து நடித்துள்ள என்.எஸ்.கிருஷ்ணன், தனது மனைவியுடன் இணைந்து பாடல்களையும் பாடியுள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பணம், மணமகள் உள்ளிட்ட 3 படங்களை இயக்கியுள்ளார். படங்களில் காமெடி செய்தாலும் ரியல் லைஃபில், தனக்கு தொல்லை கொடுத்த ஒரு தயாரிப்பாளரிடம் கடுமையாக நடந்துகொண்ட என்.எஸ்.கே அதையும் தனது காமெடி பாணியிலேயே செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 1948-ம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் சந்திரலேகா. இந்த படத்தில் என்.எஸ்.கே சர்க்கஸ் கோமாளியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் என்.எஸ்.கே ஒரு பாடலை பாட வேண்டி இருந்ததால் அதற்கான பணிகள் முடிந்து ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கே பாட தொடங்கியுள்ளார். தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் அங்கே இருந்துள்ளார். அப்போது முதல் முறை பாடி முடித்தபின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் தனக்கு திருப்தி இல்லை மீண்டும் ஒருமுறை பாடுங்கள் என்று கூறியுள்ளார்.
2-வது முறை பாடி முடித்த பின்னும் மீண்டும் தனக்கு திருப்தி இல்லை என்று கூறிய எஸ்.எஸ்.வாசன் தொடர்ந்து அடுத்தடுத்த முறையும் திருப்தி இல்லை என்று கூறி மீண்டும் மீண்டும் பாட சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமான என்.எஸ்.கே, நான் உங்களுக்காக பாடவில்லை, ரசிகர்களுக்காக பாடுகிறேன். உங்களுக்கு பிடித்த மாதிரியெல்லம் பாட முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதுவரை எஸ்.எஸ்.வாசனை யாரும் எதிர்த்து பேசாத நிலையில், என்.எஸ்.கே-வின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
என்.எஸ்.கேவின் இந்த பேச்சை கேட்ட எஸ்.எஸ்.வாசன் ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து வெளியே வர, பாருங்க இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் நீங்களே மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். அதன்பிறகு மீண்டும் பாடலை ரெக்கார்டிங் செய்யலாம் என்று சொன்னபோது எஸ்.எஸ்.வாசன் வேண்டாம் இந்த பாடலையே மீண்டும் கேட்டுப்பார்ப்போம் என்று கேட்டுள்ளார். அப்போதுதான் வாசனுக்கு புரிந்துள்ளது.
இந்த பாடல் ரசிகர்களுக்காக பாடியது. அதனால் படத்தில் இருக்கட்டும் என்று எஸ்.எஸ்.வாசன் கூறியதை தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற "ஆயிலோ பக்கிரியாமா" என்ற அந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“