சினிமாத்துறையில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஜெமினி ஸ்டூடியோவில் அமல்படுத்தப்பட்ட ஒரு விதியை நீக்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
அதேபோல் சக நடிகர் நடிகைகளுடன் அன்பாகவும், நட்புடனும் பழகும் வழக்கத்தை வைத்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன், சினிமாவில் பல பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்கும் அளவுக்கு பிரபலமான இருந்துள்ளார். அதே போல் அந்த காலக்கட்டத்தில் பல படங்களை தயாரித்து முன்னணி ஸ்டூடியோவாக திகழ்ந்தது ஜெமினி ஸ்டூடியோ. 1941-ம் ஆண்டு வெளியான மதனகாமராஜன் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த ஜெமினி நிறுவனம் பல படங்களை தயாரித்துள்ளது.
அதேபோல் ஜெமினி ஸ்டூடியோவில் நடிகராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும், நேராயாக ஸ்டூடியோவுக்க காரில் சென்றவிட முடியாது. அந்த ஸ்டூடியோவின் நுழைவு வாயிலில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அங்கேயே காரை நிறுத்திவிட்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். அனைவருக்கும் இந்த விதி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், 1943-ம் ஆண்டு மங்கம்மா சபதம் என்ற படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ளது.
வசுந்தரா, ராஜன். டி.ஏ.மதுரம் ஆகியோருடன் என்.எஸ்.கிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். படப்பிடிப்புக்காக அவர் காரில் வந்தபோது, ஜெமினி ஸ்டூடியோவின் காவலாளி அவரை தடுத்து நிறுத்தி இந்த காரை இங்கு விட்டுவிட்டு உள்ளே நடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஏன் என்று என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க, இது முதலாளி உத்தரவு என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட என்.எஸ்.கிருஷணன், இந்த சங்கிலியை எடுத்தால் தான் நான் இந்த படத்தில் நடிக்க வருவேன் என்று முதலாளியிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு காரை எடுத்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த தகவல் உடனடியாக ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு செல்ல, அதிர்ச்சியான அவர், உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு, அங்கு சங்கிலி போடுவதை நிறுத்திக்கொண்டு அனைவரும் காரில் உள்ளே வர அனுமதித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“