எம்.ஜி.ஆர் அவரது சகோதரர் சக்கரபாணி இடையே லேசான உரசல்கள் இருந்தபோது, அவர்களை சேர்த்து வைக்கவும், அவர்களுக்கு இடையே மோதல் இல்லாமல் இருக்கவும், என்.எஸ்.கே ஒரு வேலை செய்துள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
அதே போல் சினிமா மட்டுமல்லாமல் அரசியல் தலைவருடனும் நெருக்கமாக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை தனது உடன்பிறந்த சகோதராகவே நினைத்தார். ஒருமுறை எம்.ஜி.ஆர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த என்.எஸ்.கே, தன்னுடன் கதாசிரியர் மா.லட்சுமணனை அழைத்து சென்றார். அந்த விழா மேடையில் பேசிய என்.எஸ்.கே, ராமாயணத்தில் ராமர் லட்சுமணனை நான் பார்ததில்லை. அதற்கு பதிலாக எம்.ஜி.ஆர் அவரது சகோதரர் சக்கரபாணியை பார்க்கிறேன்.
இவர்கள் இருவரும் அந்த அளவிற்கு பிரியாமல் ஒன்றினைத்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களை பார்ப்பதற்கே, ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் தம்பி இருவரும் இப்படியே காலம் காலமாக வாழ்ந்து, சகோதரர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று பேசி முடித்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டார். காரில் போய்க்கொண்டிருக்கும்போது, கதாசிரியர் மா.லட்சுமணனிடம் நான் ஏன் அப்படி பேசினேன் தெரியுமா என்று என்.எஸ்.கே கேட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் சகோதரர்கள் அந்த அளவிற்கு ஒற்றுமையா இருக்காங்க அதனால நீங்க அப்படி பேசுனீங்க என்று மா.லட்சுமணன் சொல்ல, அதுதான் இல்லை. சமீபகாலமாக எம்.ஜி.ஆருக்கும் அவரது சகோதரர் சக்கரபாணிக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் இருக்கிறது. அவர்கள் இருவரும் சண்டை போட்டு பிரிந்துவிடுவார்களே என்ற சூழல் உள்ளது. அப்படி எதுவும் நடந்துவிட கூடாது என்பதால் தான் நான் அப்படி பேசினேன்.
நான் அப்படி பேசியதை பார்த்தவுடன் எல்லோரும் அப்படி நினைக்கிறார்கள் போல, நாம அப்படியே இருக்கனும் என்று அவர்களுக்கு தோனும் இல்லயா. பொதுமக்கள் இவர்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி இருப்பவர்களை வெட்டிவிடாமல் ஒட்ட வைப்பது நம்முடைய வேலை அல்லவா என்று கூறியுள்ளார் என்.எஸ்.கிருஷ்ணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“