தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத பல தத்துவ பாடல்களை கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள், சோகம், அழுகை, விரக்தி, காதல் உள்ளிட்ட பல தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒளிக்க செய்த கண்ணதாசன், பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.
அதேபோல் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் நெருக்கிய பழக்கிய கண்ணதாசன், இசையமைப்பாளர் – கவிஞர் என்பதை தாண்டி இருவருக்கும் இடையே ஒரு ஆழமான நடிப்பை போற்றி வந்தனர். இவருக்கும் இடையே ஆழமான புரிதல் இருந்திருந்தாலும், அவ்வப்போது இவர்களுக்குள் தொழில் ரீதியான மோதலும் இருந்துள்ளது. ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்ற நிலையில் தான் இருந்துள்ளனர்.
அந்த வகையில் கண்ணதாசனின் பல பாடல்களுக்கு எம்.எஸ்.வி தனது இசையால் மெருகேற்றியுள்ளார். இதில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கு எம்.எஸ்.வி இசையமைக்க 6 வருடங்கள் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாவ மன்னிப்பு. சிவாஜி, தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்ரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் வரிகளில் அமைந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற அத்தான் என்னத்தான் என்ற பாடல் இன்றளவும் பேசப்படும் ஒரு பாடலாக உள்ளது. இந்த பாடலுக்கு இசையமைக்க கண்ணதாசன் 6 வருடங்கள் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் புள்ளி விபரத்துடன் கூறியுள்ளார். மேலும் அதேபோட்டியில் அதற்கான காரணத்தையும் எம்.எஸ்.வி விளக்கியுள்ளார்.
ஒருமுறை கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி விசு இந்த பாடலுக்கு மெட்டு போடு என்று கூறியுள்ளார். இந்த பாடலை படித்து பார்த்த எம்.எஸ்.வி தனக்கு ஒன்றுமே புரியவில்லை என்பதால் அதை அப்படியே விட்டுள்ளார். 6 வருடங்கள் கழித்து பாவ மன்னிப்பு படத்திற்கு ஒரு பாடல் தேவை என்றபோது படத்தின் இயக்குனர் பீம் சிங்கிடம் எம்.எஸ்.வி இந்த பாடல் குறித்து கூறியுள்ளார். இதை கேட்ட பீம் சிங் பாடல் ரொம்ப நல்லாருக்கு இதை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, எம்.எஸ்.வி உடனடியாக கண்ணதாசனை அழைத்து முழு பாடலையும் எழுதி தருமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு கண்ணதாசன் பாடல் எழுத 15 நிமிடங்களில் அந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி. அதன் காரணமாகத்தான் இந்த பாடலுக்கு இசையமைக்க 6 வருடங்கள் 15 நிமிடங்கள் ஆனது என்று கூறியதாக இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“