தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படங்களை வரிசைப்படுத்தினால் இந்த படங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக பாசமலர் படம் இருக்கும். இந்த படத்தில் ஒரு நிமிட காட்சியில் நடிப்பதற்காக சிவாஜி ஒருநாள் விடுப்பு கேட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்
Advertisment
சிவாஜி கணேசன் நடிப்பில்,‘’ப’’ வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் பீம்சிங். இவரது இயக்கத்தில், 1961-ம் ஆண்டு வெளியான படம் தான் பாசமலர். ஏ.பி.கொட்டாரக்கரா என்பவர் கதை எழுதிய இந்த படத்தில், சிவாஜி கணேசன்,சாவித்ரி அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர். மேலும் ஜெமினி கணேசன்,கே.ஏ.தங்கவேலு,நம்பியார்,எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த இந்த படத்திற்கு கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, ‘மலர்களை போல் தங்கை,மலர்ந்து மலராத பாதி மலர் போல,வாராயன் தோழி வாராயோ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.
இன்றைக்கும் திருமண வீடுகளில் பெண் அழைப்பின்போதும்,திருமணம் முடிந்து தம்பதி வீட்டுக்கு வரும்போதும்,வாராயன் தோழி வாராயோ பாடல் ஒலிக்காமல் இருக்காது. அதேபோல் இன்றைய காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படங்கள் அதிகம் வருகிறது என்றால் அதற்கு முன்னோடி இந்த பாசமலர் தான். அந்த வகையில் பல சிறப்புகளை கொண்ட இந்த படத்தின் க்ளைமேக்ஸ் கட்சியில்,ஒரு நிமிட காட்சி நடிப்பதற்காக சிவாஜி கணேசன் ஒருநாள் விடுப்பு கேட்டுள்ளார்.
Advertisment
Advertisement
கதைப்படி இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சியில், சிவாஜி தனது தங்கை சாவித்ரியை பார்த்து கைவீசம்மா கைவீசு என்ற பாடலை பாடி நடிக்க வேண்டும். அதிகப்படியான செண்டிமெண்ட் நிறைந்த இந்த காட்சியை இயக்குனர் பீம்சிங், சிவாஜியிடம் விளக்கி சொன்னபோது, அவர் இந்த காட்சியில் நடிக்க ஒருநாள் விடுப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ஒருநாள் விடுப்பு எடுத்தக்கொண்ட சிவாஜி கணேசன், அடுத்தநாள் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருமே சிவாஜியின் நடிப்பை பார்க்க ஆவலாக இருந்ததால், அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது. இயக்குனர் பீம்சிங், ரோலிங் ஆக்ஷன் என்று சொன்னவுடன், சிவாஜி கைவீசம்மா கைவீசு என்று நடிக்க தொடங்கியுள்ளார். இந்த காட்சி முடிந்தவுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருமே கைதட்டி அவரை பாராட்டியுள்ளனர். படத்திலும் இந்த காட்சியை பார்க்கும்போது பலரும் தன்னை மறந்து கண்ணீர் வடிப்பார்கள்.
என்னதால் நடிப்பு பல்கலைகழகம், நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு காட்சி சிறப்பாக வருவதற்காக விடுமுறை எடுத்து அதற்காக மெனக்கெட்டுள்ளார் சிவாஜி கணேசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“