கண்ணதாசன் லேட்டாக வந்ததால், அந்த நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை ஒரு பாடல் எழுதுமாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அவர் எழுதிய பாட்டு, கண்ணதாசன் லேட்டாக வந்ததை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்த நிலையில், பாடலை பார்த்த கண்ணதாசன் இனி என் வாழ்நாளில் லேட்டாக வரமாட்டேன் என்று கூறியுள்ளார். பட்டுக்கோட்டை அப்படி என்ன பாட்டு எழுதினார்?
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், சிறுவயதில் நாடக நடிகராக இருந்து பின்னாளில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து, பல்வேறு தடைகளை கடந்து 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் பங்களை கொடுத்த எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
1950-காலக்கட்டத்தில் தனது பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்ட எம்.ஜி.ஆர், முதல் படமாக நாடோடி மன்னன் படத்தை தயாரிக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் இயக்குனராக அறிமுகமான நிலையில், பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஒரு கட்டத்தில் கையில் இருந்த பணம் எல்லாம் காலி ஆகி இருந்தாலும் படம் முடிந்த பாடு இல்லை.
அதே சமயம் முயற்சியை கைவிடாத எம்.ஜி.ஆர், கடன் வாங்கி படத்திற்காக செலவு செய்துள்ளார். இந்த படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று தனது நண்பர்கள் பலரிடம் கூறியுள்ளார். அந்த காலக்கட்டத்தில், ஒரு பாடல் கம்போசிங்கின்போது, கண்ணதாசனிடம் பேசிய எம்.ஜி.ஆர், நாளை காலை 9 மணிக்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு கண்ணதாசனும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை 8 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் வந்துவிட்ட நிலையில், கண்ணதாசன் மட்டும் 12.30 மணிக்கு வந்துள்ளார். மன்னித்துவிடுங்கள் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்று கண்ணதாசன் சொல்ல, நீங்கள் வரும் வரை எதற்காக டைம் வேஸ்ட் பண்ணணும் என்று சொல்லி பட்டுக்கோட்டையை ஒரு பாடல் எழுத சொல்லியிருந்தேன் என்று சொல்லி ஒரு பேப்பரை கண்ணதாசன் கையில் கொடுத்துள்ளார்.
அந்த பாடலை படித்த கண்ணதாசன், நான் லேட்டாக வந்ததற்காக கன்னத்தில் 4 அறை அறைந்திருக்கலாம். ஆனால் இப்படி செய்யக்கூடாது. இனிமேல் என் வாழ்நாளில் நான் லேட்டாக வரவே மாட்டேன் என்று கூறியுள்ளார். பட்டுக்கோட்டை அப்படி என்ன பாட்டு எழுதினார் என்றால், நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘’தூங்காதே தம்பி தூங்காதே’’ என்ற பாடல் தான் பட்டுக்கோட்டை எழுதியது.
குறிப்பாக இந்த பாடலில் வரும் போர் ‘’படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான், உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான். ஒரு பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால், பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா’’ என்று எழுதியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.