தமிழ் சினிமாவில் குறுகிய காலமே பாடல்கள் எழுதினாலும், தான் எழுதிய அத்தனை பாடல்களையும் மக்கள் மத்தியில் பிரபலமான எளிய சொற்களுடன், சமூக சீர்த்திருத்த கருத்துக்களை கொடுத்துள்ள பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் இன்று.
தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் முத்திரை பதித்த இளம் கவிஞர்களில் முக்கியமானவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த கவிஞரான பட்டுக்கோட்டையார், தனது 29-வயதில் மரணமடைந்தது தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
சமூக சீர்த்திருந்தங்களை தனது பாடல்கள் மூலம் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்திய பட்டுக்கோட்டையாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் தான் பார்க்கும் ஒவ்வொரு செயலையும் கவிதையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். இவரின் கவிதை நயத்தை கேட்ட ஊர் மக்கள் சினிமாவுக்கு சென்றால் பெரிய ஆளாக வருவாய் என்று சொல்ல, அதற்காக சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.
சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில், நாடகங்களில் பாடல்கள் எழுதவும், சிறுசிறு கேரக்டர்களில் நடிக்கவும் செய்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக எழுதிய ஒரு பாடல் தான். சின்னக்குட்டி நாத்துனா என்ற பாடல். கல்யாணசுந்தரம் தனது திரை வாழ்க்கையில் ஜாலியாக எவ்வித சமூக கருத்தும் இல்லாமல் எழுதிய ஒரே பாடல் இதுதான். அதேபோல் தமிழ் சினிமாவில் தாலி செண்டிமெண்ட வைத்து பல பாடல்கள் வந்திருந்தாலும் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் போல் இதுவரை ஒரு பாடலும் வரவில்லை என்று சொல்லலாம்.
1960-ம் ஆண்டு ஜி.கே.ராமு இயக்கத்தில் வெளியான படம் வீரக்கணல். ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, எம்.சரோஜா, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் வசனங்கள் எழுத, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். பி.எஸ்.வீரப்பா இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில், கண்ணதாசன், மருதகாசி ஆகியோ படத்திற்காக பாடல்களை எழுதியிருந்தனர். இதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பாடல் மட்டும் எழுதியிருந்தார். அந்த பாடல் தான் ‘’தாலி போட்டுக்கிட்ட ரெண்டு பேரும் போட்டுக்கணும்’’ என்ற பாடல்.
பெண்களில் தாலி செண்டிமெண்ட் வைத்து பல பாடல்கள் வந்திருந்தாலும், ஆண் பெண் சமத்துவத்தை பற்றி பேசியது இந்த பாடல் பாடல்தான். தாலி போட்டுக்கிட்டா ஆணும் பெண்ணும் சேர்ந்து போட்டுக்கனும், காலம் மாறும்போது நாமும் மாறிக்கணும் என்று பட்டுக்கோட்டை எழுதிய வரிகள் ஆண் பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் எழுதியிருப்பார். படத்தின் ஹீரோ ஹீரோயின் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி என்றாலும், பாடலுக்கு நடனமாடுவது கே.ஏ.தங்கவேலு எம்.சரோஜா ஆகிய இருவரும் தான்.
1960-ம் ஆண்டில் வெளியான இந்த பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பது தான் தனி சிறப்பு. சிறிது காலமே இருந்தாலும் தனது பாடல்கள் மூலம் மக்களை சிந்திக்க வைத்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.