தனது படங்களில் கதை மற்றும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எம்.ஜி.ஆர், அதை விட ஒரு படி மேலே போய் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தன்னை விமர்சித்து பாடல் எழுதிய ஒரு கவிஞருக்கு அந்த பாடலை படமாக்கும்போது பதிலடி கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹீரோக்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர் நடிப்பு இயக்கம் என சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்ட இவர், எந்த பிரச்சனை வந்தாலும் அதை அசால்ட்டாக எதிர்கொள்ளும் திறன் மிக்கவர் என்று அவரை பற்றி தெரிந்த அனைவரும் கூற நாம் கேட்டிருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் குறித்து தற்போது தெரிவந்துள்ளது.
1961-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ சாமி இயக்கத்தில் வெளியான படம் அரசிலங்குமரி. எம்.ஜி.ஆர் – பத்மினி இணைந்து நடித்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். பொதுவாக தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் தனது தலையீடு இருப்பது போல் திருத்தங்களை சொல்வது எம்.ஜி.ஆரின் வழக்கம். இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு பிடிக்காத காரணத்தால் இந்த படத்திற்கு பாடல் எழுத மறுத்துள்ளார்.
அதே சமயம் எம்.ஜி.ஆர் நேரடியாக சென்று கேட்டுக்கொண்ட காரணத்தினால், பாடல் எழுத ஒப்புக்கொண்ட பட்டுக்கோட்டை, எம்.ஜி.ஆரை பாடலில் விமர்சித்துள்ளார். திரையுலகில் எம்.ஜி.ஆரின் அண்ணன், சக்ரபாணி பெரியவர் என்றும், எம்.ஜி.ஆர் சின்னவர் என்றும் அழைப்பார்கள். இதை வைத்து பட்டுக்கோட்டை எழுதிய பாடல் தான் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடல். இந்த பாடலில் ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று எழுதியிருப்பார்.
இந்த பாடலில் கவிஞர் நம்மை தான் விமர்சிக்கிறார் என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், பாடலை படமாக்கும்போது, ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அந்த பாடலை அந்த குழந்தையை பார்த்து பாடுவது போன்று படமாக்கி இருப்பார். இந்த பாடலில் எம்.ஜி.ஆர் படமாக்கிய விதத்தை பார்த்து பட்டுக்கோட்டை வியந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“