தமிழ் சினிமாவில், இன்று பெரிய சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், திரைத்துறையில் பல சாதனைகளை செய்திருந்தாலும், தொடக்கத்தில் என்னால் வசனம் பேச முடியாது என்று சொல்லிவிட்டு செட்டில் இருந்து பாதியில் வெளியேறியவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அடுத்து பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த், 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரையும் வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் சிவக்குமார், சுமித்ரா ஆகியோருடன் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ஒருநாள் உதவி இயக்குனர், ஒருவர் ரஜினிகாந்துக்கு வசன பேப்பரை கொடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக போன இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், மீண்டும் வந்து பார்க்கும்போது ரஜினிகாந்த் அங்கு இல்லை. அதனால் அதிர்ச்சியாக அவர், ரஜினி எங்கே என்று கேட்டபோது, அவர் வெளியில் நடந்து போனதாக கூறியுள்ளனர்.
இதன்பிறகு ஒரு வண்டியை அனுப்பி அவரை அழைத்து வர, ஏன் பாதியிலே கிளம்பிட்டீங்க என்று எஸ்.பி.முத்துராமன் கேட்க, கே.பாலச்சந்தர் சார், ஒரு முழு படத்திற்குமே இவ்வளவு பெரிய வசனத்தை கொடுக்காமாட்டார். ஆனால் நீங்கள், ஒரு சீனுக்கே இவ்வளவு வசனம் கொடுத்திருக்கீங்களே, இதை நான் பேசுவேன் என்று நினைக்கிறீங்களா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட எஸ்.பி.முத்துராமன், அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன்பிறகு இந்த முழு வசனத்தையும் நீ ஒரே டேக்கில் பேச வேண்டாம். 4 அல்லது 8 லைன் பேசு அதற்கு ஏற்றபடி நான் ஷாட் வைக்கிறேன். உன்னை கஷ்டப்படுத்தமாட்டேன் என்று சொல்ல, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. எஸ்.பி.முத்துராமன்’ சொன்னபடி, ரஜினிகாந்த் நிறுத்தி நிறுத்தி வசனம் பேச அதற்கு ஏற்றபடி படமாக்கியுள்ளார். இந்த தகவலை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“