க்ளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சாவித்ரி. ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் பசியால் வாடிய கொடுமையை அனுபவித்துள்ளார்.
1934-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சாவித்ரி, 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1952-ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜியுடன் இவர் நடித்த பாசமலர், மற்றும் பாவ மன்னிப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சாவித்ரிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
ஒரு கட்டத்தில் நடிகர் ஜெமினி கணேசனுடன் காதலில் விழுந்த சாவித்ரி அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு வெற்றி கிடைக்காத நிலையில், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த வகையில் 1971-ம் ஆண்டு வெளியான ப்ராப்தம் என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து படத்தை தயாரித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியடைந்ததால் இதுவே சாவித்ரி தமிழில் நாயகியாக நடித்த கடைசி படமாக மாறியது.
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருந்த சாவித்ரி கடைசி காலத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாத வகையில் மாறிவிட்டார். அவரது கடைசி காலத்தில் தூர்தஷனில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக, அவரது படங்கள் குறித்து விஜயா வாஹினி ஸ்டூடியோவில் கேட்டபோது, 4 பாடல்களை மட்டும் கொடுத்துவிட்டு இவ்வளவு தான் இருக்குனு சொல்லுங்க அந்த அம்மா பேசிட்டு போய்டுவாங்க.
அவங்க என்ன பானுமதியா, ஸ்டூடியோ முன் வந்து சத்தம் போட என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு கிடைத்த பாடல்களை வாங்கிக்கொண்டு வந்து நிகழ்ச்சி செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த சாவித்ரி, மதிய நேரத்தில் பசிக்குது என்ன செய்வது என்று தெரியவில்லை. மத்திரை போட வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், ஒரு 10 நிமிடம் இருங்கள் எனக்கு வீ்ட்டில் இருந்து சாப்பாடு வரும். அதை நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு சரி என்று சொன்னாலும், சாவித்ரியால் பசி தாங்க முடியாத நிலையில், மீண்டும் அவரிடம் சாப்பாடு கேட்க, அவர் கேண்டீனில் இருந்து தக்காளி சாதம் வாங்கி கொடுத்துள்ளார். கடும் பசியில் இருந்த சாவித்ரி அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, இது போதும் இன்னும் 4 மணி நேரத்திற்கு என் உடல் தாங்கும் என்று கூறியுள்ளார். முதல் நாளில் தூர்தர்ஷனுக்கு அவர் சென்றபோது அங்கிருந்தவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
அதன்பிறகு நிகழ்ச்சியின் இயக்குனர் அவர் தான் சாவித்ரி என்று சொன்னபோது, மறுநாள் அவரை பலரும் வரவேற்றுள்ளனர். நேற்று இப்படித்தானே உங்களை பார்த்துக்கொண்டே போனேன் என்று சொல்ல, உங்களை எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதை கேட்ட சாவித்ரி, இவர்களுக்கு நான் இன்னும் நினைவில் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியும், இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டேனே என்ற சோகமும் அவர் கண்ணில் தெரிந்தது என்று தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் எம்.எஸ்.பெருமாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“