80-களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. 1979-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான புஷ்யராகம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர்,1980-ம் ஆண்டு நடிகர் வினு சக்ரவர்த்தி எழுதிய வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து, மூன்றாம் பிறை, நீதி பிழைத்தது, சகலகலா வல்லவன், மூன்று முகம், கோழிகூவுது உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருந்தார். முன்னணி நடிகராக இருந்தாலும், புதுமுக நடிகராக இருந்தாலும் அந்த படத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால் படம் மிகபெரிய பெற்றியை பெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலம். இதனால் 80-களில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷூட்காக பலரும் காத்திருந்தனர்.
கவர்ச்சி நடிகை ஒரு பாடலுக்கு நடமாடுவது மட்டுமல்லாமல், தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் சில்க் ஸ்மிதா. குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் – ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாக காதலர்களை சேர்த்து வைக்கும் கேரக்டரில் சில்க் ஸ்மிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய சினிமாவில் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சில்க் ஸ்மிதா கடைசியாக தமிழில் கடந்த 1996-ம் ஆண்டு சரவணன் நடிப்பில் வெளியான திரும்பி பார் என்ற படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரின் மரணம் இந்திய சினிமாவில் வெற்றிடத்தை ஏற்படத்தியது. சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் தைரியமான பெண்ணாக அறியப்பட்ட சில்க் ஸ்மிதா ஒருமுறை விழா ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்துள்ளார். அவரை பார்த்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்துள்ளனர். ஆனால் சில்க் மட்டும் எழுந்திரிக்காமல் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது அங்கிருப்பவர்கள் சில்க் ஸ்மிதாவிடம் சைகை காட்டியும் அவர் கண்டுகொள்ளாமல் அமர்ந்தே இருந்துள்ளார். இதை கவனித்த சிவாஜி கணேசன் எதையும் காட்டிக்கொள்ளாமல் சென்றாலும், பிறகு சில்க் ஸ்மிதா திமிர் பிடித்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அது உண்மைதான் போல என்று சொன்னதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அப்போதைய பத்திரிக்கைகளில் பரபரப்பான செய்தாக வந்தது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் நடித்த வாழ்க்கை திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த சில்க் ஸ்மிதா வெள்ளை ரோஜா, நீதிபதி, தீர்ப்பு, சுமங்கலி, தராசு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தும் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“