கல்யாண வீட்டில் சிவாஜி கலந்துகொண்டபோது அங்கு பேராசிரியர் ஞானசம்பந்தம் பேச உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட சிவாஜி கல்யாண வீட்டிலும் பேச்சா என்று கேட்டுவிட்டு 15 நிமிடம்தான் பேசனும் சரியா என்று கண்டிஷன் போட்டு அனுப்பியுள்ளார். அதன்பிறகு நடந்துது என்ன என்பது குறித்து பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், 1952-ல் தொடங்கி தன் வாழ்நாளின் இறுதிவரை நடிப்பில் அசத்தியவர். ஹீரோவாகவே அறிமுகமானாலும் பின்னாளில் முக்கிய கேரக்டர்களில் நடித்து பலரையும் வியக்க வைத்த சிவாஜி, தனது ஆரம்ப காலத்தில் கட்டபொம்மன், மனோகரா, உள்ளிட்ட பல படங்களில் நீண்ட வசனங்களை சாதாரணமாக பேசி பாராட்டுக்களை பெற்றிருப்பார்.
ஹீரோவாக மட்டும்லலாமல் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் சிவாஜி கணேசன் பற்றி இன்றைய பிரபலங்கள் அவ்வப்போது பேசுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த தமிழ் பேராசிரியர் ஞானசம்பந்தம் சிவாஜி குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவையான பேச்சால் பலரையும் கவர்ந்துள்ள பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒருமுறை, கமலா தியேட்டர் அதிபரின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.
இந்த திருமணத்தில், சிவாஜி கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நிலையில், அங்கு திருமண மேடையில், பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு சிவாஜியிடம் கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட அவர், என்னயா திருமண வீட்டிலும் பேச்சா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட ஏற்பாட்டாளர் இல்ல அய்யா 15 நிமிடம் தான் பேசுவார் என்று சொல்ல, பேராசிரியர் ஞானசம்பந்தத்தை அழைத்த சிவாஜி கணேசன், தனது பையில் இருந்து கடிகாரத்தை எடுத்து 15 நிமிடம் தான் பேசனும் சரியாக என்று கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2WlO0bGIxyhTWA8iOha0.jpg)
சிவாஜியின் பேச்சுக்கு சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறிய பேராசிரியர் ஞானசம்பந்தம், நான் என் அப்பாவிடம் இருந்து பெற்ற தமிழை விட உங்களிடம் இருந்து பெற்ற தமிழ் தான் அதிகம் என்று சொல்லி பேச்சை தொடங்கி, கட்டபொம்மன், மனோகரா உள்ளிட்ட படங்களில் சிவாஜியின் வசனங்களை பேசாமல், அவர் நடித்த நகைச்சுவை படங்களை பற்றி பேச தொடங்கியுள்ளார். 15 நிமிடம் ஆனவுடன், விழா ஏற்பாட்டாளர் வந்து முடித்துக்கொள்ளலாமா என்று சிவாஜியிடம் கேட்க, என்ன அழகா பேசிக்கிட்டு இருக்கான் பேசாம உட்காருயா என்று கூறியுள்ளார் சிவாஜி.
திருமண வீட்டில் பேச்சு வேண்டாம் என்று முதலில் யோசித்த சிவாஜி கணேசன், பேராசிரியர் ஞானசம்பந்தம் பேசிய நகைச்சுவை கலந்த பேச்சின் காரணமாக அவர் அனுமதித்தை நேரத்தை விடவும் அதிகமாக கேட்டு ரசித்துள்ளார் என்று பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“