க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிகமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு படத்தை கூட தயாரிக்கவில்லை. ஏன் தெரியுமா?
1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் – பானுமதி நடிப்பில் வெளியான படம் தாய்க்கு பின் தாரம். சின்னப்ப தேவர் இந்த படத்தை தயாரித்திருந்தார். இதுதான் அவர் தயாரித்த முதல் படம் இந்த படம் பெரிய வெற்றிபடமாக அமைந்திருந்தாலும், இந்த படத்தின் டப்பிங் பணிகள் போது ஏற்பட்ட மோதல் காரணமாக எம்.ஜி.ஆர் அதன்பின் சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நீலமலை திருடன், செங்கோட்டை சிங்கம், உள்ளிட்ட சில படங்களை சில நடிகர்களை வைத்து தயாரித்த சின்னப்ப தேவர், சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். மேலும் அவரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவரை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அவருக்கு பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
மேலும் சின்னப்ப தேவர் சிவாஜி இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. ஆனால் தனது திரை வாழ்க்கையில் சின்னப்ப தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் என்று கூறப்படுகிறது. 1956- தாய்க்கு பின் தாரம் படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் மீண்டும் சின்னப்ப தேவருடன் இணைந்த படம் தாய் சொல்லை தட்டாதே.
இந்த படம் 1961-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது, சின்னப்பதேவரிடம் எம்.ஜி.ஆர் ஒரு சத்தியம் வாங்கியுள்ளார். நீங்கள் என்னை வைத்து தான் படம் தயாரிக்க வேண்டும். மற்ற நடிகர்களை வைத்து நீங்கள் படம் தாயரிக்க கூடாது. குறிப்பாக சிவாஜி கணேசன் நடிப்பில் நீங்கள் எந்த படத்தையும் தயாரிக்க கூடாது என்று அம்மா படத்தின் மீது சத்தியம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சத்தியத்தின் காரணமாகத்தான் எம்.ஜி.ஆர் நடிப்பில் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆர் அரசியலுக்கு சென்றபின், ரஜினிகாந்த், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் தயாரித்த சின்னப்ப தேவர் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படம் கூட தயாரிக்கவில்லை. ஆனாலும் இருவருக்கும் இடையே கடைசிவரை நெருங்கிய நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“