தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் மற்றும் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், கதையே கேட்காமல் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், முதல் நாள் ஷூட்டிங்கில் அவருக்கே படக்குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே.ஷங்கர். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கடந்த 1984-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் எழுதாத சட்டங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஜெய்சங்கர், நம்பியார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் சிவாஜி நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து அவர் வீட்டுக்கு சென்றபோது, சிவாஜி மலேசியாவில் இருந்துள்ளார். அவரது சகோதரரிடம் பேசியபோது, அண்ணனிடம் கேட்கிறேன் என்று சொல்லி சிவாஜியிடம் போன் செய்து கேட்க, ஷங்கர் படம் என்றதும் சரியாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் என்ன கதை என்று கேட்க, மலையாள படத்தின் கதையாம் என்று சொல்ல, அப்போ சரி மலையாள படங்கள் நன்றாகத்தான் இருக்கும் என்று சிவாஜி கூறியுள்ளார்.
அதன்பிடி சிவாஜி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்து ஜெய்சங்கர், நம்பியார், பிரபு, ஸ்ரீவித்யா, நளினி, ராஜேஷ், சரத்பாபு, ஆா.என்.மனோகர் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். சிவாஜி மலேசியாவில் இருந்தாலும் முதல் நாள் படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அன்று காலை 5 மணிக்கு சென்னை வந்த சிவாஜி, வீட்டிற்கு போய் குளித்துவிட்டு, 7 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்க வந்துள்ளார்.
அவர் மிகவும், சோர்வாக இருந்ததால், நான் கொஞ்சம் தூங்கிக்கொள்கிறேன். மேக்கப் போட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கியுள்ளார். அப்போது உதவியாளர்கள் மேக்கப் போட, ஷாட் ரெடி என்று எழுப்பியுள்ளனர். எழுத்து கண்ணாடியை பார்த்த சிவாஜி இந்த படத்தில் நான் முஸ்லீமா என்று கேட்க, இயக்குனர் ஆமாம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு என்ன சீன் என்று கேட்க, அவர் இறந்து கிடக்கிறார். நீங்கள் அங்கு வந்து கதறி அழ வேண்டும் என்று கூறியுள்ளனர். என்னப்பா முதல் நாளே இழவு சீனா எடுக்குறீங்க என்று கேட்ட சிவாஜி அந்த காட்சியில் சிறப்பாக நடித்து முடித்ததாக இயக்குனர் பாரதி கண்ணன் கூறியள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“